நாங்கள் இலங்கையில் அழிக்கப்படுகின்றோம் என்று தெரிந்தும் தெரியாமல் இந்த உலகம் நடக்கின்றது!

புதன் மே 11, 2016

பிரான்ஸ்  தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான திரு.திருச்சோதி அவர்களுடனான சந்திப்பொன்றை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தோம். சமகால நிலவரம், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுப் போராட்டங்கள் தொடர்பாக அவருடன் கலந்துரையாடியதில் இருந்து....

தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளீர்கள். உங்கள் பயணத்தின் நோக்கம் பற்றி?

அண்மையில் நான் தென்னாபிரிக்காவிற்கும் மொறிசியசிற்கும் சென்று வந்திருந்தேன். முதலில் மொறிசியஸ் நாட்டிற்கு சென்ற அடிப்படை நோக்கம், அங்குள்ள அரச தலைவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பை வைத்திருப்பதற்காக என்றே சொல்லலாம். நாங்கள் ஒருவரோடு தொலைபேசியூடாகக் கதைப்பதற்கும் நேரடியாகக் கதைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அத்தோடு அங்கு தமிழ் மக்களுக்கென்று ஒரு பலம் இருக்கிறது.

இன்று எமது போராட்டத்திற்கு வழிவகுக்கக் கூடியவர்கள் உலகத்தமிழர்கள் தான். உலகத் தமிழர்களின் பக்கபலத்தை வைத்துக்கொண்டுதான் போராட்டத்தை நடத்துகின்றோம். அந்த ஆதரவுத் தளம் பலமாக இருக்கும் போதுதான் அந்த நாடுகளும் எங்களுக்கு ஆதரவைத்தரும். இன்று உலகத்தில் தமிழர்கள் பலநாடுகளில் பரவலாக வாழுகின்றார்கள். பல நாடுகளில் ஆதிக்க சக்திகளுக்கு தமிழர்களின் தேவை உள்ளது. மொறிசியஸ் நாட்டில் அரசாங்கம் தமிழர்களை வைத்துக்கொண்டுதான் எதையும் செய்யமுடியும். தமிழர்களை எதிர்த்துக்கொண்டு அந்த அரசாங்கம் ஒன்றும் செய்யமுடியாது.

அதேபோன்றுதான் தென்னாபிரிக்காவில் தென்னாபிரிக்கத் தமிழர்கள். தென்னாபிரிக்கப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். தென்னாபிரிக்க விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அந்த அனுபவம் கொண்டவர்கள் நிறைப்பேர் இருக்கினம். ஆபிரிக்க தேசிய கொங்கிரசில் (African National Congress) நிறைய முக்கிய பதவிகளில் இருக்கினம். அவர்களை வைத்துக்கொண்டு, அவர்களுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டு அவர்களின் ஊடாக தென்னாபிரிக்க அரசுடன் கதைக்கவேண்டிய சூழல் இன்று உள்ளது.

போராட்ட காலத்தில் இருந்த தென்னாபிரிக்க அரசுக்கும் இன்று உள்ள தென்னாபிரிக்க அரசுக்கும் வித்தியாசம் உள்ளது. போராடும்போது தங்களுடைய விடுதலையை நோக்கி, தங்களின் நாட்டு மக்களின் உரிமையை நோக்கி போராடிய அரசாங்கம், இன்று சர்வதேச அரசியலுக்குள் அதாவது இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் என்று சொல்லி ஒரு அணியை உருவாக்கிக் கொண்டு செயற்பட்டுக்கொண்டு உள்ளது. அந்தக்காலத்தில் அணிசேரா நாடுகள் என்று ஓர் அணி உருவாக்கப்பட்டது. அதேமாதிரி பொருளாதார ரீதியில் பிறிக்ஸ் என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு ஒரு வங்கி, அதற்கு ஒரு முதல் அதாவது இங்கு ஐரோப்பிய ஒன்றியம் எப்படி இருக்கின்றதோ, அமெரிக்காக் கண்டத்தில் வைத்திருப்பதைப்போன்று இன்று பிறிக்ஸ் அதற்கு சமாந்தரமாக ஓர் அமைப்பை உருவாக்கி வைத்துள்ளது. அதில் தென்னாபிரிக்கா அங்கத்துவ நாடு. இன்று எமது பிரச்சினைகளை அமெரிக்காவும் பிரித்தானியாவும் கையாண்டது.

சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவும் எங்களை எதிர்த்துக் கொண்டிருந்தது. அதாவது கிழக்கு மேற்கு என்ற யுத்தத்தில் தொடர்ச்சியாக நாங்கள் பாதித்துக்கொண்டிருக்கின்றோம். பனிப்போர் இன்றும் நடக்கிறது. முந்தி வெளிப்படையாக நடந்தது. இன்று தொடர்ச்சியாக வேறுவிதமாக நடக்கின்றது. சிரியா யுத்தத்தில் பார்த்தால் கூட அது நடக்கின்றது. அந்த அடிப்படையில் தான் தென்னாபிரிக்க தேசிய கொங்கிரஸ் (ஏஎன்சி) ஊடாகத் தென்னாபிரிக்க அரசை நாடுவதற்கு கதைத்தோம். ஏஎன்சி வந்து  பலஸ்தீன பிரச்சினைகளில், கியூபா விடயங்களில் நூறுவீதம் ஆதரவாக இருக்கின்றது. எங்களோடு ஒரு கட்டத்தில் ஆதரவுத் தளம் இருந்தது. தமிழீழ முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் போன்றோர் ஏஎன்சியுடன் தொடர்புகளைப் பேணியிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் முழு ஆதரவு அமைப்பாகத்தான் ஏஎன்சி இருந்தது. ஆனால் இப்போது அந்தத் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அங்கே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இருந்தது. இன்று அது செயல்வடிவம் அற்று இருக்கும் சூழலில், நாங்கள் இந்த உறவை மீண்டும் வளர்க்கவேண்டிய சூழல் இருக்கின்றது. அதற்கு பக்கபலமாக இருப்பது. தென்னாபிரிக்காவில் உள்ள தமிழ் மக்கள். சுமார் 5 இலட்சம் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.  அந்த ஆதரவுத் தளங்களை உருவாக்குவதற்கும் பலமாக வைத்திருப்பதற்குமே இந்த சந்திப்பு. இந்தப் பயணத்தில் தென்னாபிரிக்காவின் பல வழக்கறிஞர்கள், பல நீதவான்கள் போன்றோரைச் சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. இவர்கள் வேற்று இனத்தவர்கள், எங்களுடைய பிரச்சினைகளை நன்கு புரிந்திருக்கின்றார்கள். இதனை எப்படி எடுத்துச்செல்லலாம் என்பது பற்றி எங்களுடன் கதைப்பதற்கு அவர்களுக்கு விருப்பம் இருக்கின்றது.

இன்று உலகத்தில் நாங்கள் தமிழராக நின்றுதான் போராடவேண்டும். தாயகப் பிரச்சினையிலும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாமல் மலையகத் தமிழர்களும் இருக்கிறார்கள். தமிழ்ப்பலம் தான் எங்களுக்கு இருக்கும் பலம். உலகத்தில் 12 கோடி தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு தேசிய இன அடையாளம் இல்லை. நாங்கள் திம்புப் பேச்சுவார்த்தை மேசையில் வைத்த முதல் சரத்து வந்து ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இன அங்கீகாரத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்று. நாங்கள் இனப் படுகொலை என்று சொல்லுகின்றோம். இனப்படுகொலை யாருக்கு எதிராக நடக்கின்றது. நாங்கள் சொல்கின்றோம் தமிழ் இனம் அழிக்கப்படுகின்றது என்று.

இந்தத் தமிழ் இனத்துக்கு எங்கு அங்கீகாரம் இருக்கின்றது. நாங்கள் ஒரு தேசிய இனம் என்று இந்த உலகம் எங்களை இதுவரை அங்கீகரிக்கவில்லை. ஐ.நாவில் வந்த பல தீர்மானங்களைப் பார்த்தால் தமிழ் என்ற வார்த்தை இல்லை. எங்களை இலங்கையில் உள்ள இலங்கையரில் பாதிக்கப்பட்ட ஒரு மக்களாகத்தான் பார்க்கின்றார்களே தவிர, தமிழ் என்ற ஒரு வார்த்தையைப் பிரயோகிக்கவே இந்த உலகம் யோசிக்கின்றது. அதற்குரிய  அடுத்தகட்ட போராட்டத்திற்குரிய வழிவகைகளை உருவாக்குவதற்கும் இந்த சந்திப்புகள் உதவியாக இருக்கும். அதாவது தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை இந்த உலகம் அங்கீகரிக்கவேண்டும். இது ஒரு சிறிய விடயம் அல்ல. பாரிய வேலைத்திட்டம். இதனை எப்படிக்கையாளப்போகின்றோம் என்பதை நாங்கள் தனியே சிந்திக்கமுடியாது.

அறிஞர்கள், அறிவியல்வாதிகள் கூடித்தான் தீர்மானிக்கமுடியும். தமிழ் கலாச்சாரம் வந்து ஒரு நீண்டகால கலாச்சாரம். எங்களுக்குள்ளேயே பழங்குடிகள் இருக்கின்றார்கள். எங்களுக்குத் தெரியாமலே தமிழ் இனத்தில் பழங்குடிகள் இருக்கின்றார்கள். அந்தப் பழங்குடி மக்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும். தென்னாபிரிக்காவில் பழங்குடி மக்களே கிளர்ந்தெழுந்து இரண்டு அரசாட்சியைப் பிடித்துள்ளார்கள். பொலிவியா, இக்கொடோ என்பன பழங்குடிகளால் உருவாக்கப்பட்ட அரசுகள். பழங்குடிமக்களின் உரிமைக்கு போராடும் அரசாகவே அந்த அரசுகள் உள்ளன.

தமிழ் பழங்குடிகள் என்பது எமது மூதாதையர்கள். அவர்கள் சுத்தமாக இன்றும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். நான் அண்மையில் கேள்விப்பட்ட விடயம். சம்பூர் பிரதேசத்தில் இந்தப் பழங்குடி மக்கள் நிறையப்பேர் உள்ளனர். அவர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பலபக்கத்தில் அழிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய அரசியல்வாதிகளாலும் அழிக்கப்படுகின்றது. சிங்கள அரசாலும் அழிக்கப்படுகின்றது. ஆகவே நாங்கள் இந்த விடயங்களை எடுத்துச் சொல்லி, அதற்குரிய ஆதரவுத் தளத்தைப் பெறுவதற்காகத்தான் இந்தப் பயணம்.  

நீங்கள் குறித்த நாடுகளுக்கு மட்டும் தான் செல்வதாக விமர்சனங்கள் எழுகின்றனவே..?

சிலபேர் குறித்த பயணத்தை தவறாக விமர்சிக்கலாம். ஏதோ ஒரு நாடு வெளிப்படையாக எமக்கு ஆதரவுக் கரம் நீட்டினால்தான் அந்த நாட்டை உதாரணமாக வைத்துக் கொண்டுதான் நாங்கள் மற்ற நாடுகளுக்குப் போகலாம். மொறிசியசில் ஆபிரிக்காவுக்கான ஒன்றியம் ஒன்று உள்ளது. அதில் தூதராக வேலைசெய்த ஒருவரின் தொடர்பு உள்ளது. அவரும் ஒரு தமிழர் ஆவார். இன்று அவர் எங்களுடன் சேர்ந்து வேலைசெய்யத் தயாராக உள்ளார். அவருக்கு ஒரு அனுபவம் உள்ளது. நாடுகளுடன் அனுபவம் இருக்கிறது. அரசுகளுடள் அனுபவம் இருக்கின்றது.

இவ்வாறான விடயங்கள் நாடுகளுக்குப் போகும்போதுதான் தெரியவருகின்றது. அந்தத் தொடர்பை வலுவாக்கவேண்டிய சக்தி எங்களிடம் உள்ளது. அதனை வலிமைப்படுத்தாமல் வெறுமானே ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று சந்திப்பதாக இருக்கமுடியாது.  இன்று பிரான்சை எடுத்துக்கொண்டால் எங்களுடைய போராட்டத்துக்கு எந்தளவிற்கு ஆதரவு வழங்குகின்றது என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிரான்சுக்கு புவியியல் அரசியல் தளங்கள் வேறு இருக்கின்றது. பிரான்ஸ், அமெரிக்கா சொல்வதைத்தான் கேட்கும். இதனைப் புரிந்துகொண்டு, எங்களுக்கு ஏற்புடைய நாடு எது, எமக்காக வேலைசெய்யக்கூய நாடு எது, எமது உரிமைக்காகப் போராடக்கூடிய நாடு எது என்று கண்டுபிடித்து அதனைத் தெரிவுசெய்து நாங்கள் மெதுவாக அதை முன்னகர்த்த வேண்டும்.  போர் முடிந்து 7 வருடம் ஆகின்றது. விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் பல போராட்டங்களைச் செய்து, கியூபா அரசுடன் தொடர்பிருந்த காலமும் இருந்தது. இன்று கியூபா அரசு மாறிநிற்கின்றது.

ஏனெனில் கியூபாவைச் சுற்றியுள்ள சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் அழுத்தம் காரணமாக உள்ளது. இது எல்லாம் புவியியல் அரசியல் சிந்தனைவாதம் தான் எங்களுக்கு எதிரிகள் நிறைய இருப்பதுபோன்ற தோற்றம் இருக்கின்றது. ஆனால் நாங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள். ருவாண்டா போன்று இன அழிப்புக்கு உள்ளான மக்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். 1983 ஆம் ஆண்டு யூலைக் கலவரத்தையே எல்லா நாடுகளும் இனப்படுகொலை எனச்சித்தரித்தவை. ஆகவே உலகத்துக்கு நாங்கள் இலங்கையில் அழிக்கப்படுகின்றோம் என்று தெரியும். ஆனால் தெரிந்துகொண்டும் தெரியாமல் இந்த உலகம் நடக்கின்றது. அதை எப்படி சர்வதேசத்திற்கு கொண்டுபோகலாம் என்பதை சிந்தித்து செயற்படவேண்டும். எமது மக்களுக்குத் தொடர்ச்சியான தோல்விகளைக் கொடுக்கக்கூடாது. வெற்றிப்பாதை எந்தளவிற்குப்போகின்றது என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு நாங்கள் செயற்படவேண்டும்.

மொறிசியஸ் நாட்டில் என்ன போராட்டம் நடந்தாலும் அவர்கள் புலிச்சின்னத்தை பயன்படுத்துவர். அவர்களின் ஆடைகளிலும் கொடிகளிலும் புலிச்சின்னம் தவறாமல் இருக்கும். கார்களில் தொடர்ச்சியாக விடுதலைப்பாடலை போடுவர். இவர்கள் தமிழீழத்தில் நேரடியாக எமது போராட்டத்தில் இல்லாவிட்டாலும் அந்தப் பற்றுறுதியோடு உள்ளனர். தொடர்ச்சியாக எங்கள் போராட்டத்தின் வீரத்தையும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளப்படுத்தலுக்குரிய சிந்தனைகள் அவர்களிடம் உள்ளன. இதனைக் கொடுத்தது எமது விடுதலைப் போராட்டம்தான். இதனை வைத்துக்கொண்டு எப்படி முன்னகர்த்தலாம் என்பதைத்தான் பார்க்கவேண்டும். இந்த வருடம் மொறிசியசுக்கு மூன்றாவது பயணம். மற்ற விடயம் ஒன்றைக் குறிப்பிடவேண்டும், தென்னாபிரிக்காவில் முதன்முறையாக மே 18 நினைவு தினம் நடைபெறவுள்ளது. மே 18 வேலை நாள் என்பதால் எல்லாரையும் உள்வாங்க முடியாது என்பதற்காக மே 22 ஆம் திகதிதான் செய்கின்றார்கள். இதில் முக்கியமான தமிழ் அரசியல் தலைவர்கள் பங்குபற்றப்போகின்றார்கள்.                           

இன்று சிறீலங்காவின் மைத்திரி அரசு, மகிந்த அரசுபட்ட கடனால் வரிச்சுமை அதிகரித்துள்ளதாக கூறுகின்றது. அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இது எமக்குரிய பிரச்சினையே அல்ல. மகிந்த என்று நாம் பார்க்காமல் இந்த மைத்திரி அரசு ஏன் இராணுவத்திற்கு வரவு செலவில் அதிகம் ஒதுக்கியது? அது அவசியம் இல்லாதது தானே? அதாவது இந்த அரசாங்கம் மகிந்த எம் மீது கடும் சுமையைச் சுமத்தினார் என்று சொன்னால். இந்த அரசாங்கம் இராணுவத்திற்கு தனது வரவு செலவில் இன்னும் தொகையை அதிகரிக்கிறது. போர் இல்லாத சூழலில் ஆயுதம் வாங்கவேண்டிய தேவை இல்லை. 2009 இல் மேற்கொண்டது போல் இப்போ படுகொலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. கைதுகள் தான் நடக்கின்றது.

இந்த நிலையில் ஏன் இராணுவத்திற்கு இவ்வளவு நிதி? இது இன்னொருவர் மீது குற்றம் சுமத்தும் அரசியலாகவே இருக்கிறது.  நாம் எமது தாயகத்தில் சொந்தக்காலில் நிற்க வேண்டும். இன்று சிறீலங்கா அரசு எமது மக்களின் காணிகளைப் பறித்துப் போட்டு, மேடைபோட்டு அதே மக்களுக்கு பரிசாகத் தருகிறார்கள். அதாவது நீ எனக்கு கீழ் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். இதற்கு எமது அரசியல்வாதிகளும் துணை போகின்றார்கள். எமது அரசியல்வாதிகள் பக்கத்தில் இருக்க மைத்திரி பரிசு தருகிறார். சொந்தக் காணியையே பரிசாகத் தருகிறார். இதன் மூலம் எங்களுக்கு கீழ்தான் நீங்கள் என சிங்கள அரசு சொல்கிறது. இதை மக்களும் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று சம்பூரில் மக்களின் போராட்டம் தொடங்கி உள்ளது. அது பூர்வீக குடிகளின் போராட்டம்.

இதுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் இன்று தங்களது போராட்டத்தை தங்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் காலம் மாறும் எங்கள் அரசியல்வாதிகள் எமது உரிமைக்கு குரல் கொடுக்காவிட்டால் மக்கள் போராட்டத்தை தடுக்க முடியாது. இதை வழி நடத்த அரசியல் தலைமையோ தலைவர்களோ எங்களுக்குத் தேவை. நாங்கள் இதிலிருந்து விடுதலை பெறவேண்டும். நாமும் அடிமைச் சிந்தனை யோடுதான் வாழ்கின்றோம். அண்மையில் பிரித்தானியாவில் இருக்கும் அமைப்புக்களிடம் இதே கேள்வியை கேட்டதற்கு அவர் அதைத் தவிர்க்க முயற்சித்தார்கள். எமது பிரிச்சினையைத் தீர்க்க வேண்டிய பாரிய கடமைப்பாடு பிரித்தானியாவிற்கு இருக்கின்றது. சிலர் அது பாட் டன்காலத்துக் கதை என சொல்லலாம்.

ஓர் இனமாக, ஒரு நாடாக இருந்த எங்களை, இன்னொரு நாடாக இருந்த சிங்களவருடன் ஒன் றாக்கிவிட்டு சுதந்திரம் கொடுத்துவிட்டு போனார்கள். எமது அரசியல் தலைமைகளின் தவறைச் சுட்டிக்காட்டதான் வேண்டும். சிறீலங்கா அரச வரைவின் போது பாராளுமன்றில் உரையாற்றிய சேர்பொன் இராமநாதன் தமிழ் இனி இல்லை என்றார். அப்படி தெரிந்து கொண்டும் தான் நாங்கள் வாழ்ந்தோம். அதன் பின் தனிச் சிங்களச் சட்டம் வரும்போது பிரித்தானியாதான் ஆளுநராக இருந்தது. இலங்கை குடியரசாகும் மட்டும் காப்பாளராக பிரித்தானிய அரசுதான் இருந்தது. அதுவரை எத்தனையோ இனக்கலவரங்கள் நடந்தன. 48 இல் இருந்து 72 வரை பல இனக்கலவரங்கள் இடம்பெற்றன அதற்கு பிரித்தானியா பேசமால் இருந்தது. 72 இற்கு பின் நடந்த பிரச்சனைகளுக்கும் பிரித்தானியா பொறுப்புக் கூறவேண்டும். அதையும் விடுவோம் 2006 பேச்சுவார்த்தை இரண்டு இனம் சரிசமனாக இருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.  அப்போ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை வருகிறது. பிரித்தானியா கொண்டு வந்தது. அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத்துவம் ரொனி பிளேயரிடம் தான் இருந்தது. அதிலிருந்துதான் கீழ்முகம் உருவானது. மேல் முகமாக இருந்த நாங்கள் கீழ்முகமானது அந்தக் காலகட்டத்தில். அதே நேரத்தில் பிரித்தானிய அரசு சிறீலங் காவிற்கு ஆயுதங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தது. இராணுவ தொடர்பாடல், அறிவூட்டல், பயிற்சிகள் வழங்கிக் கொண்டிருந்தது. அண்மையில் ஒர் அறிக்கை வந்தது பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிற் மிலிபண்டும், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சு பேர்னாட் குஸ்னரும் சிறீலங்காவிற்கு போகும் போது பிரித்தானிய அரசு சிறீலங்கா இராணுவத்துடன் தொடர்பில் இருந்தது. இவை எல்லாம் அண்மையில் வெளிவந்த அறிக்கை. பிரிந்தானியாவிடம் பொறுப்பு கூற கேட்க வேண்டியது அங்கு வாழும் நான்கு இலட்சம் தமிழ் மக்கள். பிரித்தானியாவிடம் வரிகட்டிக்கொண்டிருக்கிறோம்.

கிழக்குத் தீமோர் பிரச்சனையை தீர்த்து வைத்தது போர்த்துக்கல். இந்தோனேசியாவில் உள்ள சிறிய நாடு. இந்தோனேசியவுடன் போரிட்ட நாடு. பேச்சுவார்த் தைக்குப் போய் தீர்வு கண்டது. பேச்சுவார்த்தைக்கு நடுநிலைமை வகித்தது போர்த்துக்கல். ஏனெனில் கிழக்குத் தீமோர் போர்த்துகல் கொலனித்துவ நாடு. எமது பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு, கடமைப்பாடு பிரித்தானியாவிற்கு இருக்கிறது. அதற்காக பிரித்தா னியாவுடன் சண்டைபிடிக்க சொல்லவில்லை. அந்த அரசுக்கு சொல்ல வேண்டும் எங்கள் பிரச்சினைக்கு மூலகாரணம் நீங்கள் தான், ஆகை யால் தீர்த்து வையுங்கள் என்று. பிரித்தானியாவில் பல தமிழ் அமைப்புக்கள் கலந்து கொண்ட சந்திப்பில் இதை முன்வைத்தபோது அதை புறந்தள்ளுவதிலேயே அவர்கள் கவனம் செலுத்தினர். எங்கள் பேச்சை உரமாகச் சொல்லும் சக்தி எங்களிடத்தில் இல்லை. பிரித்தானிய அரசுக்கு எதிராக போராடினால் எமக்கு ஆதரவு இல்லாமல் போகும் என்ற பயம் எங்களிடத்தில் இருக்கிறது.

பிரித்தானியா தனது கொலனி த்துவ காலத்தில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரித்துவிட்டது. இன்றும் அங்கு பிரச்சினை இருக்கிறது. இரண்டாக இருந்த எம்மை ஒன்றாக்கியதால் இன்றும் பிரச்சினை இருக்கிறது. ஆகவே அவர்கள் எம்மை விட்டு செல்லும் போது பாரிய அரசியல் குழப்பங்களை தந்துவிட்டுதான் போயிருக்கிறார்கள். அது இந்தியாவாக இருக்கட்டும், இலங்கையாக இருக்கட்டும். நாங்க பேசாமல் ஆமாப் போட்டுக் கொண்டிருக்கப் போகின்றோமா?  நியாத்தைத்தானே கேட்கிறோம். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் மலேசியாவில் இருக்கும் மக்கள் மகாராணியாருக்கு எதிராக வழக்கு போட முனைந்தார்கள். பாரிய போராட்டங்கள் நடந்தது. அவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களது முயற்சி ஏதோ ஒரு காரணத்தால் முடக்கப்பட்டது. உலகில் 12 கோடி தமிழர்கள் வாழ்கின்ற போதும், மேடையில் தமிழருக்கு வீரம் பேசிக்கொண்டு பெருமை பேசுவதில் பலன் இல்லை. எமது உரிமைகளை சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுப்பதனுVடாகவே பெற்றுக் கொள்ளலாம். இதுவரை நாங்கள் வந்த பாதையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு போகவேண்டிய சூழலில் இருக்கிறோம்.

முதலாவது, ஜெனிவா கூட்டத் தொடர் ஒக்டோபரில் ஒரு பாரிய அறிக்கை வந்தது. இதுவரை அப்படி ஒரு அறிக்கை வந்ததில்லை. தொண்ணுVறுவீதமானது சிறீலங்காவிற்கு எதிராகத்தான் இருக்கிறது. எந்தளவிற்கு அதைநாம் பயன்படுத்துகிறோம் என்பதைப்பார்க்க வேண்டும். இரண்டாவது சிங்கள அரசு புத்திசாலித்தனமாக ஓர் இணக்க அரசியலுக்கு போனபடியால் தான் இந்த கீபிறிட் கோட் உருவானது. இல்லாவிட்டால் சர்வதேச விசாரணைக்கு அல்லது பாதுகாப்பு சபைக்குப் போய், பாதுகப்பு சபை ஊடாக இது வந்திருக்கும். சிங்கள அரசு புத்திசாலித்தனமாக செயல்படுகிறது என்று சொன்னால் நாங்கள் இங்கிருந்து கொண்டு உணர்ச்சிவசப்படுத்தும் அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கிறம். எமது போராட்ட அழிவிற்கு சர்வதேசத்தின் சூனிய அரசியல் தான் காரணம். சகுனிமாதிரி செயல்பட்டு சர்வதேசம் எங்களை அழித்தது. இரண்டு பக்கமும் தாளம் போட்டு எங்களை அழித்தது இந்த சர்வதேசம். நாமும் சகுனி ஆட்டம் ஆடவேண்டிய காலம் வந்துவிட்டது. அதைப் புரிந்து கொண்டு நாங்கள் செயல்படவேண்டும். போராட்டக் களங்கள் வேறு, போராட்டங்களை காலத்திற்கேற்றவாறு வலுவாக எமது மக்களின் சக்தியைக் காட்ட வேண்டும். இலங்கையிலும் காட்ட வேண்டும். இலங்கையில் பலதரப்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின் றன. அரசியல் தலைவர்மார் அவற்றை ஒன்றிணைத்து போராட்டத்தை நடத்த வேண்டும். மே தினத்தில் மக்களை அணிதிரட்டி நடத்துவது மட்டுமல்ல போராட்டம். மே தினம் தொழிலாளர் தினம் பல்லா யிரக்கணக்கில் மக்கள் போனார்கள், சந்தோசமான விடயம். அங்கு நடக்கின்ற காணி அபகரிப்புக்கள், இப்ப நடக்கும் கைதுகள் குறித்து யார் குரல் கொடுத்தார்கள்? எவரும் குரல் கொடுக்கவில்லை எந்த அரசியல் தலைவரும் குரல் கொடுக்கவில்லை.

மே 18 ஊர்வலம் பிரான்சு நாடாளுமன்றத்திற்கு முன்னால் செல்லாமல் லாச்சப்பலில் இருந்து குடியரசு சதுக்கத்திற்கு செல்வதற்கு பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இதற்கான காரணத்தை வாசகர்களுக்கு தெளிவுபடுத்துவீர்களா?

பிரான்சில் சுமார் 37 வருடமாக வாழ்ந்து வருகின்றேன். நாங்களும் போராட்ட காலங்களில் சில தவறான செயல்பாடுகளை செய்துள்ளோம். ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். உதாரணத்திற்கு 2009, 2010 காலங்களில் ஊர்வலங்களை Ecole Militer இல் தொடங்கி Trocadore இல் முடித்த நாங்கள். எமது ஊர்வலம் சென்ற குறிப்பிட்ட பகுதியில் மக்கள் யாரும் இருக்கவில்லை.

ஈபிள் கோபுரத்தை அண்மிக்கும் போதுதான் மக்கள் நடமாட்டம் இருக்கும். அதேவேளை மனித உரிமை சதுக்கத்தில் செய்யும் போது கூட எம்மை சுற்றுலா பயணிகளாகத்தான் எல்லோரும் பார்த்தார்கள். சுற்றுலாதலமாக இருந்ததால் எமது கோரிக் கைகள் சரியான இடத்திற்கு சென்றதாக இல்லை. அதற்கு பின்தான் முடிவெடுத்தோம் போராட்ட இடத்தை மாற்ற வேண்டும் என்று. அத்துடன் எமது மக்கள் அனைவரும் எமது வலிகளை உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றைய இன மக்கள் எமது வலியை புரிந்துகொள்ளும் அளவிற்கு, உதாரணமாக மே தினத்தில் அன்று ஆபிரிக்க சமூகத்தை சேர்ந்த ஒருவர் தேசியத் தலைவரின் படத்தை காட்டி அவர் இருக்கிறாரா? எனக் கேள்வி கேட்டார். தலைவர் மீது அப்படி மதிப்பு இருக்கிறது.

தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் தேசியத் தலைவரின் புகைப்படத்துடன் நின்று படம் எடுக்க வேண்டும் என்றார். அப்போ மனம் எழுச்சி கொள்கிறது. எமது ஊர்வலம் மக்கள் அதிகம் உள்ள பகுதியால் செல்லும் போது அவர்கள் படம் எடுக்கும் போது தெரிகிறது எப்படி மக்கள் மத்தியில் எமது பிரச்சினையை கொண்டு செல்வதென்று. ஆகவேதான் மக்கள் அதிகம் இல்லாத இடங்களை விட்டு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள Republique நோக்கி செல்ல வேண்டும் என்று. மேலும் எமது மக்களும் அந்த வலிகளை மறக்கிற சூழல். எல்லாம் முடிந்தது செத்துப் போனார்கள்.

சமூதாயம் என்னவென்று சொன்னால் அப்பா செத்தால் அவரது சவத்திற்கு முன்னால் நின்று சிறிது நேரம் ஒப்பாரி வைப்போம். அதன் பின்னர் பின்னால் சென்று சிரித்து கதைத்து சாப்பிடுவோம். இதை நான் நேரே பார்த்திருக்கின்றேன். பின்பு அவருக்குரிய கிரியைகள் முடிந்த பின்னர் நாலாம் நாளோ, பத்தாம் நாளோ எல்லாம் செய்வதோடு எல்லாம் முடிந்துவிடும். பின்னர் ஒவ்வொரு வருடமும் திவசம் செய்வோம். எதோ அப்பாவில் பாரிய பற்று இருப்பது போல். இவற்றை செய்யக் கூடாது என்றோ இதற்கு எதிர்ப்பானவர் என்றோ இல்லை. ஆடி அமாவசை வரும் போது அதற்கும் விரதம் இருப்போம் அதன் பின்னர் மறந்து போவோம். மீண்டும் அவரது நினைவு நாளில் தான். முள்ளிவாய்க்கால் அநியாயமாக கொல்லப்பட்ட நாள் கொடுமை. இந்தக் கொடுமையை நாம் மறந்தோம் என்றால் நாம் மனிதரே இல்லை. தங்கள் நிலத்தில் வாழவேண்டும் என்பதற்காக பதுங்குகுழிக்குள் வாழ்ந்த மக்கள். அவர்கள் விட்டுவிட்டு போயிருக்கலாம், எல்லாரையும் இயக்கம் விட்டுவிட்டு போயிருக்கலாம் என்று உலகம் சொல்கிறது. விடுதலைப் புலிகள் எல்லாரையும் பிடித்து வைத்தார்கள், மனிதக் கேடயமாக என்று குற்றம்சாட்டினார்கள். அன்று மூன்று இலட்சம் மக்களும் வெளிக் கிட்டால் அந்த மனித கேடயம் எந்த மூலைக்கு. இது உலகத்திற்கு புரியாமல் இருக்காது. நாம் புரிந்துகொள்ள வேண்டும். தாம் தமது மண்ணிலே வாழவேண்டும் என்றே அவர்கள் இருந்தார்கள். எத்தனையோ போராளிகள் தங்கள் குடும்பத்தை 17 ஆம் திகதி தான் போகச் சொன்னார்கள். தங்களை இனங்காட்டாமல் விட்டார்கள். நாம் இதை மறப்போமாக இருந்தால் நாம் மனிதரே இல்லை. ஆகவே தான் தமிழ் மக்கள் கூடுகின்ற லாச்சப்பலில் இருந்து ஊர்வலத்தைத் தொடங்குகின்றோம். மே 18 அன்று வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

சந்திப்பு; பரா, கந்தரதன்

நன்றி: ஈழமுரசு