'நாங்கள் தமிழக மக்களை நம்புகிறோம்!’ - வேலூர் சிறையிலிருந்து நளினி!

செவ்வாய் டிசம்பர் 22, 2015

தமிழகத்தில், பெண் சிறைக்கைதிகளில் அதிக நாட்கள்... மிக அதிக நாட்கள்... சிறைக்குள் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்,  அதன்பிறகு மரண தண்டனைக் கைதியாக, ஆயுள் தண்டனைக் கைதியாக 24 ஆண்டுகளை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் ஆயுளில் பாதி கரைந்துவிட்டது. இந்த நிலையில், நளினி உள்பட ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் தமிழக அரசு கருணைகாட்டி விடுதலை செய்ய முன்வந்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு தடைகேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7 பேரின் விடுதலைக்குத் தடை விதித்துவிட்டது.
இனி என்ன செய்வார் நளினி...? அவருடைய வழக்கறிஞர் புகழேந்தியின் மூலம் அவரைப் பேட்டி கண்டோம்.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வும் உங்கள் விடுதலைக்குத் தடை விதித்துவிட்டது. இதற்கு மேலும் உங்கள் விடுதலை குறித்து உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? 
நம்பிக்கை உள்ளது. நான் நிச்சயமாக விடுதலையாவேன். அதற்கு சட்டத்திலும் வாய்ப்புள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு எங்கள் விடுதலைக்கு தடை விதித்தது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி தமிழக அரசு எங்களை விடுதலை செய்யலாம். அதில் எங்களை தமிழக அரசு விடுவித்தால், அதை மத்திய அரசோ அல்லது நீதிமன்றங்களோ தடுக்க முடியாது. அப்படித் தடுக்க முடியாது என்பதையும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வே தனது தீர்ப்பிலும் குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று, நான் கடந்த 2014-ம் தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளேன். அதில், தமிழக அரசு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை. எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, அதில் உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளேன். அந்த வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

அந்த மனுவில் என்ன குறிப்பிட்டுள்ளீர்கள்...அதில் சென்னை உயர் நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்துள்ளதா?

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மூன்று விதமான வழிமுறைகளைப் பின்பற்றுகிறது.

 1.    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை
 2.    14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கழித்தவர்களை சிறைத் சீர்திருத்த அறிவுரைக் குழுமத்திற்கு அனுப்பி விடுதலை செய்வது.
 3.    20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை, மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது.

இந்த முறைகளைப் பின்பற்றி, கடந்த 2001, 2006, 2007, 2008 என நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு, சுமார் 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்துள்ளது. ஆனால், என்னை விடுதலை செய்யவில்லை. அதற்கு நாங்கள் சி.பி.ஐ. விசாரித்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த நவம்பர் 10,1994-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்து அரசாணை வெளியிட்டது. அதில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும், ஆயுள் தண்டனைக் கைதிகளை, அவர்கள் எந்தவிதமான குற்றத்தில் ஈடுபட்டு இருந்தாலும் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, என்னை விடுதலை செய்யக்கோரி, தமிழக அரசிடம் கடந்த பிப்ரவரி 22, 2014-ம் ஆண்டு கோரிக்கை மனு கொடுத்தேன். அந்த மனு மீது அரசு இதுவரை நடவடிக்கையும்  எடுக்கவில்லை. எனவே, என் கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று என் மனுவில் குறிப்பிட்டு உள்ளேன். உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள், என்னுடைய மனுவை விசாரித்து, இதில் தமிழக அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


தமிழக அரசு உங்களை விடுதலை செய்யும் என்று இன்னும் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? 

தமிழக அரசு என்னை மட்டுமல்ல, ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கருதியதால்தானே, சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது. எங்களை விடுதலை செய்யப்போவதாகவும் அறிவித்தது. தற்போது உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இந்தத் தடையையும் தாண்டி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி என்னை நிச்சயம் விடுதலை செய்யும்.

ஏதோ ஒரு நாளில்... ஏதோ சில நொடிகளாவது இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்குள் அகப்பட்டுக் கொண்டதை நினைத்து - குறிப்பாக முருகனைத் திருமணம் செய்து கொண்டதை நினைத்து வருத்தப்பட்டுள்ளீர்களா?

என் கணவர் முருகன் எந்தத் தவறும் செய்யவில்லை. அவருக்கும் ராஜிவ் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதனால், நான் அவரைக் காதலித்ததற்கோ திருமணம் செய்து கொண்டதற்கோ ஒரு நாளும் வருத்தப்படவில்லை.

சிறை வாழ்க்கை உங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்று எதையாவது குறிப்பிட முடியுமா?

சிறைக்குள் என்னை மற்றக் கைதிகளுடன் பேச அனுமதிப்பதில்லை. ஆனாலும், நான் என்னால் முடிந்த அளவில், சில கைதிகளுக்கு என் வழக்கறிஞர்கள் உதவியுடன் சில உதவிகளைச் செய்கிறேன். பக்கா விஜயா என்ற பெண்ணுக்கு அப்படி ஒரு உதவி செய்தேன். அது உங்கள் ஜூனியர் விகடன் இதழில் கூட கட்டுரையாக வெளிவந்திருந்தது. அதுபோல, செய்யாத குற்றத்துக்காக, சந்தர்ப்ப சூழ்நிலையால் சிக்க வைக்கப்பட்டு, சிறைக்குள் வந்து, எந்த உதவியும் இல்லாமல் துன்பப்படும் சில கைதிகளுக்கு என் வழக்கறிஞர்கள் மூலம் விடுதலை பெற்றுத் தந்தேன். எனக்குள் இந்த சிறை வாழ்க்கை பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இப்போது அவற்றை நான் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

உங்கள் குடும்பத்தினர் உங்களோடு தொடர்பில் இருக்கின்றனரா? 

என் தாயார் பத்மா என்னை மாதத்திற்கு ஒரு முறை வந்து பார்க்கிறார். என் கணவர் முருகனும் நானும் மாதம் இரண்டு முறை சந்தித்துக் கொள்வோம். என் கணவரின் உறவினர்களும் அவ்வப்போது என்னை வந்து சந்தித்துவிட்டுப்போவார்கள். என் மகள் லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

ராஜிவ் கொலை வழக்குப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதா?

சத்தியமாகத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல; என் கணவருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால், காதலித்துத் திருமணம் செய்த என்னை, அதுவும் நான் கர்ப்பிணியாக இருந்த நிலையில் என்னை அவர்களுடன் அனுப்பி இருப்பாரா? அதுபோல், இப்போது இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும், ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் யாருக்கும் அந்தச் சம்பவம் பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் அனைவரும் இந்த வழக்கில் சாட்சிகளாக இருக்க வேண்டியவர்கள். ஆனால், குற்றவாளிகளாக மாற்றப்பட்டு இன்று தண்டனைக் கைதிகளாக இருக்கிறோம். அந்தச் சம்பவம் பற்றி தெரிந்தவர்கள் யாரும் இப்போது இல்லை. அவர்கள் இறந்துவிட்டனர். குண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி இறந்து பல மணி நேரம் கழித்துத்தான் எனக்கே விவரம் தெரியவந்தது.

தொடர் சட்டப் போராட்டங்கள், தமிழகத்தில் ஆதரவு, தமிழக அரசின் ஆதரவு என்று இருந்தாலும்கூட உங்கள் விடுதலை இன்னும் சாத்தியப்படவில்லை. அதைத் தடுக்கும் சக்தி எது?

அரசியல்தான். அரசியல், அரசியல் காரணங்கள், காய் நகர்த்தல்களுக்குள் எங்களின் விடுதலை சிக்கிக் கிடக்கிறது. குறிப்பிட்டு யாரையும் நான் குற்றம் சாட்டவிரும்பவில்லை. நாங்கள் தமிழக மக்களை நம்புகிறோம். தமிழக அரசாங்கத்தை முழுமையாக நம்புகிறோம். எனது விடுதலையும் என்னோடு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களின் விடுதலையும் விரைவில் சாத்தியப்படும்.

இவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறீர்கள். அப்படியானால் விடுதலையானபிறகு என்ன செய்ய வேண்டும் என்பதையும் இப்போதே தீர்மானித்து இருப்பீர்கள் அல்லவா?

என் மகளுக்காக மீதமுள்ள என் வாழ்க்கையை அர்பணிப்பேன். அதைத் தவிர வேறு ஒரு சிந்தனைக்கே இடமில்லை.

'மாநில அரசு விடுதலை செய்தால் தடுக்க முடியாது'

குற்றவியல் நடைமுறைச்சட்டத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் என்ன வித்தியாசம்? நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி மற்றும் நளினிக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராதா கிருஷ்ணனிடம் கேட்டோம்.

"குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432(அ),433-ன் படி ஒரு ஆயுள் தண்டனைக் கைதியை விடுவிக்க வேண்டும் என்றால், அதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும். அவர்கள் அனுமதி கொடுக்காதபட்சத்தில் மாநில அரசு தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தச் சட்டத்தின் கீழ் விடுதலை செய்ய முடியாது.

அதேபோல, அரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி மாநில அரசு, மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யலாம். இந்தச் சட்டப்பிரிவின்படி மாநில அரசு விடுதலை செய்தால், அதை மத்திய அரசோ அல்லது வேறு அரசு அமைப்போ தடுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், நீதிமன்றங்களுக்குக்கூட அதைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது. இதைத்தான் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வும் தன்னுடைய தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.

இதனால்தான், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தமிழக அரசு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுவித்ததற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதன்மேல், இதில் மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்று நினைக்கிறோம். இதை நாங்கள் அப்போதே யூகித்துத்தான், நளினி சார்பில் நாங்கள் பிப்ரவரி 22, 2014- அன்றே தமிழக அரசிடம் ஒரு மனுவைக் கொடுத்தோம். அதில், நளினி தன்னை அரசமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் முறையிட்டிருந்தார். இப்போது அது தொடர்பான வழக்குத்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது" என்றனர்.

- ஜோ.ஸ்டாலின் (நன்றி - விகடன்)