நாசா விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை!

புதன் பெப்ரவரி 15, 2017

அமெரிக்காவின் ஹூஸ்டன் ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தில் நாசா விஞ்ஞானியை உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வாரம் பிடித்து வைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் விஞ்ஞானிகளில் ஒருவர், சித் பிக்கான்னவர் (வயது 35). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், அமெரிக்காவில் பிறந்தவர். அமெரிக்காவின் ஹூஸ்டன் ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தில் இவரை உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வாரம் பிடித்து வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அத்துடன் அவரது செல்போனையும் பறித்து வைத்தனர்.

இதுபற்றி அவர் தனது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அமெரிக்காவில் கடந்த வாரம் நான் எனது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் என்னை முஸ்லிம் நாடுகள் மீது பிறப்பிக்கப்பட்ட தடையின்கீழ் பிடித்து வைத்து விசாரித்தனர். எனது செல்போன் இயக்கத்தை முடக்கி வைக்குமாறு கூறினர். அது நாசா வழங்கிய செல்போன் என்பதால், முதலில் அதற்கு மறுத்தேன்.

ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். நான் அமெரிக்காவில் பிறந்த குடிமகன். ‘நாசா’ என்ஜினீயர். செல்லத்தக்க அமெரிக்க பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்கிறேன். அவர்கள் எனது செல்போனை எடுத்துக்கொண்டு, என்னிடம் ‘பின்’ எண்ணை கேட்டுப்பெற்றனர். அதில் உள்ள தகவல்களை நகல் எடுக்கிற வரையில், என்னை கட்டில்கள் போடப்பட்டு, பிடித்து வைக்கப்பட்ட பலரும் தூங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்து விட்டனர். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். இது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.