நாடு மீண்டுமொரு அழிவைச் சந்திக்கப்போகிறது - சங்கரி

January 11, 2017

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நாடு மீண்டுமொரு அழிவைச் சந்திக்கப்போவதாகவும் இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லையெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அக்கடிதத்தில் சிறீலங்காப் பிரதமருக்கு அவர் தெரிவித்திருப்பதாவது,

“தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நமது நாடு எங்கே செல்கின்றது என்று எவருக்கும் தெரியவில்லை. என்னுடைய 60 வருடகால அரசியல் அனுபவத்தை வைத்து நான் சொல்வதை எவரும் புரிந்துகொள்வதுமில்லை. ஆனால் மீண்டும் ஒரு அழிவை எமது நாடு சந்திக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள்தான் என்று கூறும் ஒரு சிலருடன் மட்டும் நீங்கள் உறவு வைத்துக்கொண்டு, ஏனையவர்களை புறந்தள்ளி, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நடத்தும் ஆட்சியில் எமது மக்களுக்கு நிலையான தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை. உங்கள் தேசிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே அரசில் நம்பிக்கை இழந்து பேசுகின்றார்கள். ஒரு அமைச்சர், தேசிய அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுவதாகக்கூட கூறுகின்றார்.

இன்னும் ஒருவர், நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றாலும் மக்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன்தான் இருக்கின்றனர் எனக் கூறுகிறார்.

இந்த நிலையில் எமது மக்களுக்கு இந்த அரசும் எதனையும் வழங்கப்போவதில்லை. காலங்காலமாக, குறிப்பிட்ட ஒருசிலருடன் மாத்திரம் அவர்களை திருப்திபடுத்துவதற்காக மட்டுமே நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அவ்வாறான ஒரு செயலையே மீண்டும் நீங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது நாட்டுக்கு மீண்டும் ஒரு அழிவையே கொண்டுவரும்.

இந்நிலையில், சகல தமிழ் அமைப்புகள் மற்றும் சகல முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கி ஒரு பேச்சுவார்த்தை மூலம் விரைவில் ஒரு தீர்வை முன்வையுங்கள். புதிய அரசியல் அமைப்பு என்று கூறி காலத்தை இழுத்தடிப்பதும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிவிட்டு என்றுமில்லாதவாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளை வழங்குவதும் மாற்றத்தை ஏற்படுத்திய சகல இன மக்களையும் ஒரு ஏமாற்றும் செயலாகவே நான் கருதுகின்றேன். மீண்டும் மக்களிடையே இனக்குரோதம் வளரத் தொடங்கியுள்ளது என்பதற்கு நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே சான்று கூறுகின்றன.

இவை எல்லாவற்றிற்கும், நான் ஆரம்பத்தில் இருந்தே அடிக்கடி கூறும் இந்திய முறையிலான ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி தென்னாபிரிக்க அரசியல் சாசனத்தில் உள்ளது போன்ற உரிமைகள் சட்டத்தை உள்ளடக்கி, அதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் ஒரு நல்ல தீர்வை வழங்கி நாட்டு மக்கள் அனைவரையும் சுபீட்சமாக வாழவைக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்
வெள்ளி June 23, 2017

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலகத்தை அமைக்கும் பொறிமுறை இடம்பெறுகிறது.

வெள்ளி June 23, 2017

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கலந்துரையாடலின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர் ஒருவரை மற்றுமொரு வைத்தியர் தாக்கியபோதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி June 23, 2017

அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் பப்புவா நியூகினியவின் மானஸ் மற்றும் நவுறுதீவு முகாம்களில் உள்ள இலங்கையர்களை அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டம் இறுதி நிலையை அடைந்துள்ளது.

வெள்ளி June 23, 2017

கண்ணி வெடிகளின் தாக்கங்களற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பை உருவாக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.