நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!

செவ்வாய் டிசம்பர் 04, 2018

பிரான்சில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் ஒன்றான ஆர்ஜென்தையில் 24.11.2014 அன்று  சாவடைந்த  நாட்டுப்பற்றாளர்  மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு ஆர்ஜென்தை தமிழ்ச்சோலை மண்டபத்தில் கடந்த 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இடம்பெற்றது. 

ஆர்ஜென்தை பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 1990ஆம் ஆண்டு கொக்குவில் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் துணைவியார் மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. 

அதனைத்தொடர்ந்து அனைவரும் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர்.  தொடர்ந்து கலைநிகழ்வுகள், நினைவுரைகள் இடம்பெற்றன. சிறப்புரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம்,  பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி ஆகியோர் ஆற்றியிருந்தனர். 

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.