நான்காவது முறையாக ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் பதவியேற்றுக் கொண்டார்!

திங்கள் மே 07, 2018

கடந்த மார்ச் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்ற விளாடிமிர் புதின் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். 

ரஷ்யா அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை, அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி விளாடிமிர் புதின் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 70 சதவிகித வாக்குகளை அவர் பெற்றிருந்தார். இந்நிலையில், அவர் முறைப்படி இன்று அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

நான்காவது முறையாக அதிபராக பதவியேற்ற அவர் 2024-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார். ரஷ்ய அரசியலமைப்பின் படி நாப்கு முறைக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்க முடியாது. இதனால், 2024-ம் ஆண்டுடன் புதின் ராஜ்ஜியம் முடிந்துவிடும். ஆனால், சீனாவை போல அதிபர் பதவியில் எத்தனை முறை வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற சட்டதிருத்தத்தை புதின் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

கிரெம்ளின் மாளிகையில் எந்த பிரம்மாண்டமும் இல்லாமல் நடந்த பதவியேற்பு விழாவில், அரசியல் சாசனத்தை கையில் வைத்துக்கொண்டு அவர் பிரமாணம் செய்து கொண்டார். 

அதிபர் தேர்தலில் புதினுக்கு சவாலாக இருப்பார் என கருதப்பட்டு, பின்னர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட அலெக்ஸி நாவன்லி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 1500 பேர் புதின் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.