'நான்கு நாட்களாக வேலையின்றி தவிக்கிறோம்'...

திங்கள் நவம்பர் 14, 2016

கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை, தினக்கூலிகளாக வேலைசெய்யும் அமைப்புசாராத் தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. அன்றாடம் வேலையில்லாமல் போவதோடு, வேலை கிடைத்தால் கொடுக்கப்படும் பணம் செல்லாக்காசாக இருப்பதால் பரிதவித்துக் கிடக்கின்றனர் அமைப்புசாராத் தொழிலாளர்கள்.

வேலை தேடி நகரத்திற்கு இடம்பெயர்ந்து வரும் உதிரித் தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் இடம் லேபர் மார்க்கெட். கட்டுமானத் தொழிலாளர்கள், எலக்ட்ரீஷியன், பிளம்பர், பெயிண்டர் என பல வேலைகளைச் செய்யும் அமைப்புசாராத் தொழிலாளர்கள் தினந்தோறும் வேலைக்காக லேபர் மார்க்கெட்டில்தான் காத்து நிற்பார்கள்.

ஒருநாளில் 300 பேர் கூடினால், 200 பேருக்குத்தான் வேலை கிடைக்கும், மற்றவர்கள் வேலையின்றி வீட்டிற்கு திரும்புவார்கள். இப்படி தினந்தோறும் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு, பேரிடியாக வந்து விழுந்தது ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு.

அதுமட்டுமின்றி, கிடைக்கும் வேலைக்கு கொடுக்கப்படும் பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் சென்று மாற்றுவதற்கு தேவையான அடையாள அட்டைகள் இன்றி பரிதவித்து நிற்கின்றனர் தொழிலாளர்கள்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பானது அமைப்புசாராத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் புரட்டிப் போட்டுள்ளது என்பது கண்கூடான உண்மை.