நான் வித்யாபாலனின் தீவிர ரசிகை! - ஜோதிகா

Friday March 02, 2018

வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிய ‘துமாரி சுலு’ படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவிருக்கும் நிலையில், நான் வித்யா பாலனின் தீவிர ரசிகை என்று ஜோதிகா கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தி படம் ‘துமாரி சுலு’. இந்த படம் தற்போது தமிழில் தயார் ஆகிறது. இதில் இந்தியில் வித்யாபாலன் நடித்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

இந்த படத்தை, பப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ஜி.தனம்ஜெயன் தமிழில் தயாரிக்கிறார். ராதாமோகன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறிய ஜோதிகா. 

“நான் வித்யா பாலன் தீவிர ரசிகை. அவர் நடித்த படங்கள் எதையும் பார்க்காமல் விட்டதில்லை. வித்யாபாலன் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் ‘துமாரி சுலு’. வித்யாபாலன் நடித்த வேடத்தில் நான் தமிழில் நடிப்பது என்னை கவுரவப்படுத்துவதாகவே கருதுகிறேன்” என்றார்.

இயக்குனர் ராதாமோகன், “இந்த படத்தை தமிழில் இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. ஜோதிகாவுடன் ஏற்கனவே ‘மொழி’ படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். ஜோதிகா நடிப்பில் இந்த படம் சிறப்பாக அமையும்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன், “இந்த அருமையான படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமை எங்களுக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.  “ஒரு தமிழ் பெண் என்ற முறையில் நான் நடித்த ‘துமாரிசுலு’ இந்தி படம் தமிழில் தயாராவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோதிகாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று வித்யா பாலன் கூறியிருக்கிறார்.