நாளை ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா!

Sunday May 06, 2018

மெரீனா கடற்கரையில் நாளை ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்.

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் வேலைப்பாடுடன் கூடிய நினைவு மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அங்கு சிறந்த கலைநயத்துடன் கூடிய வடிவமைப்புடன் நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை தாங்கி அடிக்கல் நாட்டுகிறார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள். முன்னதாக காலை 6.30 மணிக்கு ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகபூஜை நடை பெறுகிறது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் முன்னின்று கவனித்து வருகின்றனர்.

நாளை காலை மெரினா கடற்கரையில் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளும் திரளாக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.