நிஜம் வடிவில் போலிகள் - கலாநிதி சேரமான்

Thursday December 28, 2017

உலகின் பல்வேறு நாடுகளில் நடந்தேறிய தேசிய விடுதலைப் போராட்டங்களில் தமக்கேயுரித்தான தனியான முத்திரையைப் பொறித்த பெருமை ஒரு சில இயக்கங்களுக்கே இருக்கின்றது. அப்படியான ஒரு தேச சுதந்திர இயக்கம் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாகும்.

சொல்லுக்கு முன் செயலுக்கு முன்னுரிமை கொடுக்கும் பாங்கு, எதிரியிடம் மண்டியிடாது தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் மரபு, மக்களுக்காகத் தமது உயிரை வேலியாக்கிக் களமாடும் மாண்பு எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கென்று தனித்துவமான பண்புகள் உண்டு. அதாவது செயல்வீச்சு, வீரம், ஈகம் என்ற மூன்று தனித்துவமான பண்பியல்புகளைக் கொண்டவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற அமைப்பைத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்தெடுத்தார். தலைவரால் நெறிக்கப்பட்ட இப்பண்பியல்புகளின் சிகரங்களாகவே ஒவ்வொரு மாவீரர்களும் வாழ்ந்தார்கள்: தமிழீழ தேச விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தம்மை ஆகுதியாக்கி வீழ்ந்தார்கள்.

இன்று மாவீரர்கள் எவருமே எம்மோடு இல்லை. எங்கள் நினைவுகளிலும், இதயக் கோவில்களிலும், வரலாற்றிலுமே அந்தப் புனிதர்கள் வாழ்கின்றார்கள். ஆனாலும் தமிழீழ தேசம் துவண்டு போய் விடவில்லை. அதற்கொரு காரணம் உண்டென்றால், பிரபாகரன் என்ற பெருநெருப்பு மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களில் உயிர்வாழ்வது தான் அக்காரணமாகும். ‘எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும், எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி, சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்...’ என்று 27.11.2008 அன்று ஒளித்திரைகளில் தோன்றி வீரசபதமெடுத்த அந்தப் பெருந்தலைவனை ஆதர்ச ஒளியாக்கி மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களும் விடுதலைப் பயணத்தைத் தொடர்கின்றார்கள்.

தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? தலைவர் வருவாரா? என்றெல்லாம் தமிழர்களிடையே நிகழ்ந்த விவாதங்கள் முடிவுக்கு வந்து ஆண்டுகள் பல ஆகி விட்டன. ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாள் நிகழும் மண்டபங்களுக்குச் செல்லும் ஒவ்வொரு தமிழர்களுக்கும் ஒரு ஆசை எழுவதுண்டு: இம்முறையாவது தலைவரின் குரலைக் கேட்க மாட்டோமா? என்பதுதான் அந்த ஆசை. ஆனாலும் தலைவரின் குரல் ஒலிக்கவில்லை என்பதற்காக எவருமே துவண்டு போவதில்லை. ஏனென்றால் அங்கு வரும் ஒவ்வொருவரின் இதயங்களிலும் தலைவர் அவர்களே வீற்றிருக்கின்றார்.

ஒரு தடவை மேற்குலக நாட்டைச் சேர்ந்த அரசறிவியலாளர் ஒருவர் கூறினார், ‘என்னைப் பொறுத்தவரை உங்கள் தலைவர் பிரபாகரனின் மரணம் அவரது பாதையை விட்டு முழுமையாகத் தமிழர்கள் விலகிச் செல்லும் பொழுதே நிகழும்.’ எவ்வளவு அர்த்தபூர்வமான கருத்து அது. அப்படிப்பட்ட பெருந்தலைவனின் குரல் மீண்டும் ஒலிக்காதா? என்ற தவிப்பில் இருக்கும் தமிழர்களைக் குழப்பும் அயோக்கியத்தனம் கடந்த மாவீரர் நாளன்று நிகழ்ந்தேறியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில், தலைவர் அவர்களின் அறிக்கை வெளிவரும் பாணியில் தயாரிக்கப்பட்டு, தலைவர் பேசும் தொனியில் ஒருவரால் வாசிக்கப்பட்ட காகித அறிக்கை, ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் மண்டபங்களில் ஒலிபரப்பப்பட்டது. இதே அறிக்கை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயல்வீச்சை சிதைக்கும் நிகழ்ச்சித் திட்டத்துடன் சிங்கள-இந்திய புலனாய்வு நிறுவனங்களின் பின்புலத்தைக் கொண்ட முன்னாள் போராளிகள் சிலரால் ஐரோப்பிய நாடுகளில் நடாத்தப்பட்ட போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் ஒலிபரப்பப்பட்டது.

இதனையிட்டு அங்கு நின்ற மக்கள் மட்டும் அதிர்ச்சியடையவில்லை. மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்காகத் தமது நேரத்தையும், வியர்வையையும் சிந்திக் கடுமையாக உழைத்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் பலர் கூட அதிர்ச்சியடைந்தார்கள். இது பற்றி தமது பொறுப்பாளர்கள் சிலரிடம் வினவிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு, இது அனைத்துலகத் தொடர்பகத்தால் தரப்பட்ட தலைமைச் செயலகத்தின் அறிக்கை என்ற பதில் கூறப்பட்டதாம்.

தலைமைச் செயலகம் என்ற பெயரிலும், அனைத்துலகத் தொடர்பகம் என்ற பெயரிலும் இயங்கும் இவர்கள் யார்? இவர்களின் பின்புலம் என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றை நுணுகி அவதானித்த அனைவருக்கும் தெரியும்: தலைமைச் செயலகம் என்பது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் செயலகமாகும். தலைமைச் செயலகத்தால் அதிகாரபூர்வமாக ஒரு அறிக்கை வெளியிடப்படுகின்றதாயின், அது தமிழீழ தேசியத் தலைவரின் அனுமதி பெற்ற அறிக்கையாகவே இருக்கும். தலைமைச் செயலகம் என்ற பெயரில் தான்தோன்றித்தனமாக இயங்குவதற்கோ, அன்றி தமிழீழ தேசியத் தலைவரின் அனுமதியின்றி அப் பெயரில் அறிக்கை வெளியிடுவதற்கோ எவருக்குமே அதிகாரம் இல்லை.

கடந்த எட்டரை ஆண்டுகளாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடனான தொடர்பை உலகத் தமிழினம் இழந்திருக்கும் சூழமைவில், தலைவர் அவர்களிடமிருந்து அதிகாரபூர்வமாக அறிவித்தல் வெளிவராத வரைக்கும் எவருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட முடியாது. ஆனால் இம்முறை நடந்ததோ வேறு. தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாகக் கே.பியை தலைவராகப் பிரகடனம் செய்து 21.07.2009 உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம் என்ற கும்பலே இவ் அறிக்கையை வெளியிட்டது. அதாவது சிங்களத்தின் கைப்பாவையான கே.பியைத் தலைவராகக் கொண்ட தலைமைச் செயலகம் என்ற கே.பி கும்பல் வெளியிட்ட அறிக்கையே கடந்த மாவீரர் நாளன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டபங்களில் ஒலிபரப்பப்பட்டது. இதே அறிக்கை தான் சிங்கள-இந்தியப் புலனாய்வு நிறுவனங்களின் பின்புலத்துடன் இயங்கும் முன்னாள் போராளிகள் சிலரால் நடாத்தப்பட்ட போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் ஒலிபரப்பப்பட்டது.

இதனை எழுதியவர்கள் இரண்டு பேர். ஒருவரின் பெயர் பாக்கியராஜா தயாமோகன். இவர் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணி புரிந்தவர். வன்னிக் களநிலவரத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் மட்டக்களப்பில் தாக்குதல்களை நிகழ்த்துவதற்காகத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் வன்னி மாணவர்களுக்கு உதவுதற்கு நிதி திரட்டுவதாகக் கூறிப் புலம்பெயர் இளையோரிடமிருந்து பல இலட்சம் ரூபா பணத்தை அபகரித்து, பின்னர் மலேசியா வந்து அங்கு கே.பியின் தலைமையில் தலைமைச் செயலகம் என்ற கும்பலை உருவாக்கி, தற்பொழுது சுவிற்சர்லாந்தில் வசித்து வருபவரே இந்தத் தயாமோகன். தலைமைச் செயலகம் என்ற பெயரில் இவர் எழுதிய அறிக்கைக்கு ஒத்தாசை புரிந்த மற்றைய நபரின் பெயர் இராமு.சுபன் என்றழைக்கப்படும் யோகராசா முத்துவேல். தமிழீழத்தில் முன்னாள் போராளிகளும், அவர்களின் குடும்பங்களும் பட்டினியால் வாட, பதினாறு இலட்சம் பவுண்கள் செலவில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் காட்டுப்புறத்தில் வரலாற்று மையம் என்ற பெயரில் மாட்டுப்பண்ணையை நடத்துபவர் இவர்.

சரி, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு தெரியாமல், மூடுமந்திரமான முறையில் கே.பி கும்பலுடன் உறவைப் பேணி, அக் கும்பலின் அறிக்கையை மாவீரர் நாள் மண்டபங்களில் ஒலிபரப்ப வைத்து, அங்கு நின்ற மக்களையும், செயற்பாட்டாளர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்த அனைத்துலகத் தொடர்பகம் என்ற பெயரில் இயங்குபவர்கள் யார்? இதுவும் அதிர்ச்சிகரமான ஒன்றுதான். அனைத்துலகத் தொடர்பகம் என்பது தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. இக் கட்டமைப்பு வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகள் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புக்களை தமிழீழ தாயகத்திலிருந்து ஒருங்கிணைப்பதற்காகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டது. தலைவர் அவர்களின் நேரடி வழிநடத்தலில் இயங்கிய இக்கட்டமைப்பின் பொறுப்பாளராக வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களே விளங்கினார். அதாவது தலைவருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புக்களுக்கு இடையிலான தொடர்பகமாகவே அனைத்துலகத் தொடர்பகம் விளங்கியது.

எதிரியால் முள்ளிவாய்க்காலில் தமிழீழ நடைமுறை அரசு அழிக்கப்பட்டுத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடனான தொடர்பை உலகத் தமிழினம் இழந்ததை அடுத்து, அனைத்துலகத் தொடர்பகமும் செயலிழந்து போனது. இக்கட்டமைப்பின் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக விளங்கிய நெடியவன் அவர்களும், அவரின் கீழ் பணிபுரிந்த போராளிகள், செயற்பாட்டாளர்களும் கே.பியின் தலைமையை ஏற்க மறுத்ததை அடுத்து, கே.பியைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம் என்ற கும்பலால் அனைத்துலகத் தொடர்பகம் என்ற உப குழு உருவாக்கப்பட்டது. இவ் உப குழுவை கே.பி கும்பல் உரு
வாக்கியதன் நோக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளையும், தமிழ்த் தேசிய அமைப்புக்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, ஈற்றில் அவற்றை சிங்கள-இந்தியப் புலனாய்வு நிறுவனங்களின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்க வைப்பதாகும்.

அதாவது தலைமைச் செயலகம், அனைத்துலகத் தொடர்பகம் ஆகிய பெயர்களில் இன்று இயங்கும் இரண்டுமே நிஜம் அல்ல: அவை நிஜக் கட்டமைப்புக்களின் வடிவில் இயங்கும் போலிக் கும்பல்கள் ஆகும். இதில் தலைமைச் செயலகம் என்ற கே.பி கும்பலால் உருவாக்கப்பட்ட அனைத்துலகத் தொடர்பகம் என்ற உப கும்பல், 2010ஆம் ஆண்டின் இறுதியில் கே.பி கும்பலுடன் முரண்பட்டு, அக் கும்பலை விட்டு வெளியில் வந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக் கிளைகளுடன் இணைந்து இயங்கத் தொடங்கியது. இதனால் அனைத்துலகத் தொடர்பகம் என்ற போலிக் கும்பலுடன், அது நிஜமான அனைத்துலகத் தொடர்பகம் அல்ல என்பதை நன்கு அறிந்திருந்தும், அதனுடன் இணைந்து செயற்படுவதற்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் இணங்கினார்கள். எனினும் தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்தும், தலைவர் அவர்களுக்குத் துரோகம் இழைத்தும் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம் என்ற கே.பி கும்பலால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை, மக்களையும், செயற்பாட்டாளர்களையும் ஏமாற்றித் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் நாள் மண்டபங்களில் ஒலிபரப்ப வைத்ததன் மூலம் தாம் மீண்டும் கே.பி கும்பலின் உப கும்பலாக இயங்குவதையே அனைத்துலகத் தொடர்பகம் என்ற போலிக் கட்டமைப்பு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் கே.பி கும்பலின் உப குழுவை விட்டு வெளியில் வருவதும், தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்துப் பயணிக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக் கிளைகளை மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்புக்களாக மேம்படுத்துவதுமே தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய பணியாகும்.

நன்றி: ஈழமுரசு