நியூசிலாந்தில் மழை வெள்ளம்

செவ்வாய் நவம்பர் 15, 2016

நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். நியூசிலாந்தில் நேற்று முன்தினம் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 7.8 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து, 2 பேர் பலியாகினர் பலர் காயம் அடைந்தனர். 

ரோடுகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், ரோடுகள், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் கிறிஸ்ட்சர்ச் மற்றும் தெற்கு தீவில் உள்ள கைகொயுரா உள்ளிட்ட நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கைகொயூராவில் 4 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அவை இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கின்றன.

இருந்தும் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு தீவில் கைகொயூராவில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதே போன்று வடக்கு தீவில் உள்ள தலைநகர் வெலிங்டனிலும் பலத்த மழை கொட்டுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கைகொயூரா சுற்றுலா தலமாகும். இங்கு நிலநடுக்கம் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரிதும் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அங்கு 1200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ஹெலிகாப்டர்களுடன், 2 கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை நியூசிலாந்து பிரதமர் ஜான் கே செய்துள்ளார்.