நிலக்கோட்டை பொன்னம்மாள் மறைவு விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் தொல்.திருமாவளவன்

புதன் நவம்பர் 25, 2015

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், பெருந்தலைவர் காமராசர்,  தூயவர் கக்கன் ஆகிய தலைவர்களின் அன்பைப் பெற்றவருமான திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

நிலக்கோட்டை மற்றும் சோழவந்தான் தொகுதிகளில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு ஏழு முறை தேர்வானவர் அவர். சபையின் மூத்த உறுப்பினராகவும், இடைக்கால சபாநாயகராகவும் செயலாற்றியவர். தலித் சமூகத்தில் பிறந்து அனைத்துத் தரப்பு மக்களின் மனங்களை வென்றவர். ஏழு முறை அவர் தேர்தலில் வென்றதிலிருந்து, வெகுமக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கைப் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாழ்வில் நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாக வாழ்ந்ததோடு, பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார். தமிழக அரசின் விருதைப் பெற்றவர். விடுதலைச் சிறுத்தைகளின் மீது பெரும் வாஞ்சை கொண்டவர். 2013-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'காமராசர் கதிர்' விருதை அவருக்கு அளித்துச் சிறப்பித்தோம். 
நிலக்கோட்டை ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.