நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதீர்கள்!

Wednesday October 18, 2017

சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதீர்கள் என ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சுகாதாரக்கேடு உள்ளிட்ட காரணங்களால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து கமல் தனது டுவிட்டர் மூலம் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ஆராய்ச்சியின் நிலவேம்பு பயன்படுத்துவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தெரியும் வரை அதை விநியோகம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டில் கூறியிருப்பதாவது:-

“சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்” என கூறியுள்ளார்.