நீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயார் ஆகிறது

ஒக்டோபர் 08, 2017

நீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாராகி வருகிறது என அங்கு சென்று வந்த ரஷிய எம்.பி. கூறினார். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாக வடகொரியா விளங்கி வருகிறது. அந்த நாட்டின் அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அடுத்தடுத்து விதித்து வருகிற பொருளாதார தடைகளை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அதிரடியாக அணுகுண்டுகளை வெடித்து சோதித்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி சோதித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 3-ந் தேதி, வடகொரியா 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி, அதுவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி உலக அரங்கை அதிர வைத்தது.

இதற்காக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதன் காரணமாக அந்த நாட்டுக்கு ரூ.7,800 கோடி வருமானம் இழப்பு ஏற்படும். .ஆனாலும் வடகொரியா அசைந்து கொடுப்பதாக இல்லை.

அந்த நாட்டுக்கு ரஷிய பாராளுமன்றத்தின் சர்வதேச விவகாரங்கள் குழு உறுப்பினரான ஆன்டன் மொரோசவ் எம்.பி., கடந்த 2-ந் திகதி முதல் 6-ந் திகதி வரை பயணம் மேற்கொண்டு விட்டு மாஸ்கோ திரும்பி உள்ளார். அவருடன் மேலும் 2 எம்.பி.க்களும் சென்று வந்துள்ளனர்.

இந்த பயணத்தை தொடர்ந்து ஆன்டன் மொரோசவ் எம்.பி. கூறியதாவது:-

அவர்கள் (வடகொரியா) புதிய நீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகி வருகிறார்கள். அவர்களது ஏவுகணை அமெரிக்காவின் மேற்கு கடலோரப்பகுதியை தாக்கும் வல்லமை படைத்தது என்பதை நம்புவதற்கு ஏற்ற வகையில் புள்ளி விவரங்கள் சொல்கிறார்கள்.

எங்களைப் பொருத்தமட்டில், எதிர்காலத்தில் மேலும் ஒரு நீண்ட தூர ஏவுகணையை ஏவி சோதிப்பதற்கு அவர்கள் எண்ணி உள்ளனர். பொதுவாக, அவர்களது மனப்பாங்கு போராடும் மனப்பாங்காக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே வடகொரியா 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியபிறகு, அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் ஒருவருக்கு ஒருவர் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகி வருவதாக ரஷிய எம்.பி., ஆன்டன் மொரோசவ் கூறி இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை அமெரிக்க அதிகாரி ஒருவர் வாஷிங்டனில் உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஆமாம், வடகொரியா ஏவுகணை ஒன்றை 10-ந் தேதி ஏவுவதற்கு தயார் ஆகி வருகிறது. இந்த நாள், கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட நாள் ஆகும்” என்றார். ஆனால் என்ன மாதிரியான ஏவுகணை அது என்று அவர் தெரிவிக்கவில்லை.

இதேபோன்று அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ.யின் ஆய்வாளர், வாஷிங்டனில் நடந்த மாநாடு ஒன்றில் பேசும்போது, 10-ந் திகதி வடகொரியா ஆத்திரமூட்டும் செயல் ஒன்றில் ஈடுபடக்கூடும் என குறிப்பிட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

செய்திகள்