நீதிகளும் தீர்வுகளும் அற்ற நிலையில், அவலங்களை மட்டுமே சுமந்து நிற்கும் பெண்கள்

திங்கள் ஓகஸ்ட் 03, 2015

இலங்கை அரசினால் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் இருந்து மீண்டும் ஒருமுறை பின் வாங்குவதன் மூலம் நீதிக்கு காத்திருக்கும் தமிழ் மக்கள் தலையில் தீ வைக்கின்றதா ஜ நா மனித உரிமைகள் அவை ?

 

இலங்கை இனவாத அரசாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என்று தமிழ் தலைவர்களால் நம்பப்பட்ட இந்தியாவாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள், நீதி கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ஜ நா மனித உரிமைகள் மன்றம் உள்ளக விசாரணை ஒன்றிட்கு இணங்குவதன் மூலம் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்ற உள்ளதாக நம்பகமான செய்தி கசிந்துள்ளது.Tami Massacre In SriLanka by latuff

 

அதன் புதிய செயலாளர் நாயகம் ஆணையாளர் கௌரவ செய்த் ராஅட் ஹுசெஇன் அவர்கள் தலைமையில் ஜ நா மனித உரிமைகள் மன்றம் இலங்கை அரசின் கபட வார்த்தைகளையும் போலி செயற்பாடுகளையும் நம்பி உள்ளக விசாரணை ஒன்றிட்கு இணங்க உள்ளது என்கிற செய்தி தமிழ்மக்கள் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. இந்த நிலையில் இப்போது பொதுத் தேர்தல் ஒன்றை சந்திக்க ஆயத்தமாகி விட்டார்கள் வேட்பாளர்கள். இடையில் 2 ஜனாதிபதித் தேர்தல்களும் 3 மாகாணசபைத் தேர்தல்களும் வந்து போய் விட்டது.

 

எங்களுக்கான தீர்வுகளை யார் பெற்று தருவார்? எங்கே ?? எப்போது ??? உண்மையாக சொன்னால் தமது வாழ்வின் ஆதாரமானவர்களை உயிரோடு இலங்கை அரசிடம் தொலைத்து விட்டு, அவர்களைத் தேடி நாள்தோறும் அணுஅணுவாக தமது உயிரைக் கொன்று கொண்டிருக்கும் தாய்மார்களும், கணவரைத் தொலைத்த, வாழ்வை இழந்த விதவைப் பெண்களும் சந்திக்கும் தேர்தல்கள் என்று தான் இவற்றை சொல்ல வேண்டும்.

 

2009ல் இருந்து கடந்த 6 வருடங்களாக உயிரினும் மேலான தமது பிள்ளைகளை, கணவரை, உறவினரை உயிரோடு இழந்து தவிக்கும் தமிழ் தாய்மார்களும் பெண்களும் ஒன்றாக நின்று நீதி கேட்கும் நாள் வந்தாயிற்று என்று கூட சொல்ல முடியும்….! கடந்த ஆறுவருடங்களாக தமிழீழத்தில் பெண்களும் தாய்மார்களும் வீதிகளில் நின்று அழுதழுதே செத்துக் கொண்டிருக்கின்றார்கள் !திரும்பிப் பார்ப்போர் யாரும் இல்லை…… ! இவர்கள், கதறியழுவது இதுவரைக்கும் யார் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை, இனிமேலும் அழுவதற்கு அவர்களிடம் கண்ணீர் இல்லை . நீதி வேண்டும் என்று அமைதியாக செயலில் காட்டி விடுவதற்கான தக்க நேரம் இது.

 

ஒவ்வொரு நிமிடமும் உயிர் கருக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள், ஒவ்வொரு தேர்தல்களின் போதும் நம்பிக்கைகள் மற்றும் தேர்தல் வேளையில் வேட்பாளர்கள் வழங்கும் வாக்குறுதிகளின் நிமித்தமும் தேர்தல்களில் தமது தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றியடைய வைத்து வந்தார்கள் இதுவரை !

 

தேர்தலில் வென்று பாராளுமன்றம் செல்பவர்கள் வென்றவுடன் ஏதாவது செய்து எமது பிள்ளைகளை காப்பாற்றி விட மாட்டார்களா என்கிற ஒரு பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். இதுவரைக்கும் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே அவர்களுக்கு ! இதுவரை காணாமல் போன மற்றும் இலங்கை அரசு கைது செய்து வைத்திருக்கும் பிள்ளைகள் குறித்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அவர்களாக எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுத்ததில்லை!

 

அல்லது மக்கள் தாமாக இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து ஊர்வலங்களோ, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களையோ முன்னெடுக்கும் வேளையில் எல்லாம், பெரும்பாலான தமிழ் அரசியல் தலைவர்கள் சத்தம் எதுவும் போடாது அமைதியாக இருந்து விடுவதும் முக்கியமான தருணங்களில் மக்களுக்கு பொறுப்பான தலைவர்களாக பதில் சொல்லாது, நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்காது அந்த இடங்களை விட்டு பின் வாயில்களால் போய் விடுவதனையே பெரும்பாலும் காண்கிறோம்.

 

‘எல்லாவற்றுக்கும் பேசினோம் அல்லது பேசிக் கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே அவர்களின் குரல் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது’ அல்லது இதுவரைக்கும் யாரிடம் இந்த விடயங்கள் குறித்து பேசினோம் ? என்ன முடிவு என்று எதுவும் கூறியது கிடையாது. விடுதலை போராட்ட செயற்பாடுகளில் அல்லது அதன் அரசியல் சமூகச் போராட்டங்களில் பங்குபற்றியோ, பற்றாமலோ அரச இராணுவ அடக்கு முறைகளினால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு கொடுத்து விடுவிக்கப்பட்ட பெண்கள் ! இனவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட நிலைகளில் கணவரை இழந்த பெண்கள் ! விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றிய ஆண்கள் உயிரை இழந்த நிலையில், விதவைகள் ஆன பெண்கள் ! தாங்கள் விதவைகளா அல்லது கணவர்மார் இன்னமும் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாமல் ஒரு வித மன உளைச்சல் மிகுந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் ! அரசு, இராணுவம் மற்றும் முன்னைய பாதுகாப்பு செயலர் கோத்தபாயா அவர்களினால் தமிழ் இளைஞர் யுவதிகளை அழிக்கவென்றே உருவாக்கப்- பட்ட சிங்கள புலனாய்வாளர்களிடம் பெற்ற (பெண், ஆண்) பிள்ளைகளை பறி கொடுத்து விட்டு வாழ்ந்து கொண்டே செத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள். வயதான காலத்தில் ஆதரவு தருவார் என நம்பியிருந்த தங்கள் மகன்மாரை, பலவேறு காரணங்களால் இழந்து வாடும் பெண் முதியோர்கள்.

 

முக்கியமான விடயம் என்னவெனில் இத்தகைய பேரவலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களில் 80%மானோர் பெண் தலைமைத்துவ குடும்ப பொறுப்பில் உள்ளோர்.Sri Lankan ethnic Tamil women hold portraits of missing relatives during a protest in Jaffna அவலங்களையும் அனுபவித்துக் கொண்டு, மீதமிருக்கும் பிள்ளைகளோடு வாழ்வதற்கும் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வளவு பேருக்கும் இந்த 6 வருடங்களில் அவர்களின் பிரச்சினைகளுக்கு கிடைத்த தீர்வுகள் என்ன? குறைந்த பட்சம் அவற்றை தீர்ப்பதற்கு போடப்பட்ட திட்டங்கள் என்ன? முதன்மைப் பிரச்சினைகளான காணாமற் போன உறவுகளை கண்டு பிடிக்க முயற்சி செய்தல் அல்லது அவர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள உதவி செய்தல் போன்ற விடயங்களுக்கு இதுவரை காணப்பட்ட தீர்வு என்ன?

 

வாழ்வாதாரம்

 

எல்லாவற்றையும் இழந்து அன்றாடம் வாழ்வதற்கு அல்லற்படும் எவ்வளவு ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள் . இவர்கள் வாழ்வினை மேம்படுத்துவதற்கு இந்த 6 வருடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன ? இலங்கையின் தென்பகுதியில் கணவரை இழந்தோருக்கு வழங்கப்படும் உதவிகளும் சலுகைகளிலும் எத்தனை சதவீதம் அந்நிலையில் உள்ள எமது பெண்களுக்கு வழங்கப்படுகிறது? குறைந்த பட்சம் இந்த உதவிகள் அவர்களுக்கு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதா ? 2009ல் இருந்து மிகக் கொடுமையான விடயங்கள் இந்தத் தாய்மார்கள் பெண்களைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன.

 

அந்தப் பெண்களோடு ஒரு பெண்ணாக அந்தத் தாய்மார்களோடு ஒரு தாயாக அவர்களிடத்தில் எம்மை வைத்துப் பார்த்தும் , அவர்கள் அனுபவிக்கும் அதே வேதனையை மனதில் அனுபவித்துக் கொண்டும் இருப்போமானால் நேரில் அவர்களிடையே இல்லாது விடினும், அந்த கொடிய வேதனை தரும் துயர் எத்தகையது என்று புரியும். பல சமயங்களில் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் முக்கியமாக துயர் தரும் காணொளிக் காட்சிகள் உடலின், மனதின் அத்தனை செயற்பாடு -களையும் முடக்கி விடுகிறது.

 

A Tamil woman sits on the ground in the Manik Farm refugee camp located on the outskirts of northern Sri Lankan town of Vavuniya May 26, 2009. U.N. Secretary-General Ban Ki-moon toured Sri Lanka's largest war displaced persons camp on Saturday during a trip to press for wider humanitarian access and political reconciliation. REUTERS/David Gray (SRI LANKA MILITARY CONFLICT POLITICS SOCIETY)

பார்ப்பதற்கும் கேட்பதற்குமே இத்தனை துயர் தரும் விடயங்களை அன்றாடம் அனுபவிப்பவர்களின் குடும்ப நிலை, பொருளாதார நிலை, உளவியல் நிலை எவ்வாறு இருக்கும் என்பதனை கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை. இங்கே எமது பெண்கள் சம்பந்தப்பட்ட இரண்டு விடயங்களை மட்டுமே பேசியுள்ளோம் …இன்னமும் அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் ஏராளம் ஏராளம் அவர்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டமை குடியேற்றம் என்கிற பெயரில் மனிதர் வாழ முடியாத இடங்களில் நிர்க்கதியாக விடப்பட்டமை தொழில் வாய்ப்புக்கள் இன்மை அல்லது உருவாக்கப்படாமை சுய தொழில் முயற்சிகளுக்கான வளங்கள் வழங்கப்படாமை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வழங்கல்

 

2009களிற்கு பின்னர் தமிழர் வாழும் பிரதேசங்களை நோக்கி எந்த வெளிநாட்டு அரசியல் மனிதவுரிமை அலுவல்கள் குறித்த பிரதிநிதிகள் , அரசியல் பிரமுகர்கள் என யார் வந்தாலும் தங்கள் தொலைத்த உயிர்களின் புகைப்படங்களை கைகளில்இறுகப் பற்றியபடி , அதனை அந்த பிரதிநிதிகளின் முன் காட்டி அல்லது அவர்கள் பயணம் செய்யும் வாகனங்களின் முன்னும் பின்னும் இராணுவ, காவற்றுறை கெடுபிடிகளையும் அச்சுறுத்தல்களையும் மீறி ஓடியபடியே இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தமது பிள்ளைகளை , கணவன்மாரை, மகன்களை எப்படியாவது காப்பாற்றித் தரும் படி கதறி அழுது கெஞ்சுகிறார்கள்.

 

நடக்காது என்று தெரிந்தும் தமிழ் பகுதிகளுக்கு வந்து போகும் நாமல் ராஜபக்ச தொடங்கி ரணில் அவர்கள் வரைக்கும் அத்தனை சிங்கள பேரினவாத அரசியல் பிரதிநிதிகளின் கால்களிலும் விழுகிறார்கள். கண்டவர் கால்களில் எல்லாம் விழுவது ஈழத் தமிழர் பண்பாட்டில் கூட இல்லை.jeyakumari-vipoosika ஜெயக்குமாரி பாலேந்திரா அவர்கள் உயிரோடு அரசின் கையில் இருக்கும் தனது மகனை மீட்பதற்கு மகளோடு பட்டபாட்டை நாம் எல்லோரும் அறிவோம். முன்னைய வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் கணவரை 6 வருடங்களாக தேடிக் கொண்டிருக்கிறார்.

 

அவருக்கே இந்த அரசாங்கம் இன்னும் பதில் கொடுக்கவில்லை கடந்த வாரம் நல்லூர் முருகன் கோயில் முன்றலில் தாய்மார்கள் கூடி காணாமற் போன தங்கள் பிள்ளைகளை , கணவன்மாரை ஒரு முறையாவது கண்ணில் காட்டும் படியும் உயிரோடு அவர்கள் இல்லாது விட்டால் அதையாவது சொல்லும் படியும் பகிரங்கமாக கேட்டிருந்தார்கள் நீதி வேண்டும் என உரக்க கேட்டிருந்தார்கள்.

 

அரசியல் தலைவர்களை நம்பி நாங்கள் ஏமாந்து போய் விட்டோம் பல தடவைகள்; அதனால் எந்த பயனும் இல்லை,இனிமேல் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என்று முடிவெடுத்தார்கள்… ! இந்த சந்தர்ப்பத்தில் இது ஓர் நல்ல முடிவாக இருக்கும் என நான் நினைக்கிறேன்

1.நினைத்தது எல்லாம் செய்யலாம் என்று இறுமாப்புடன் இருக்கும் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும்

-எமக்கும் உரிமைகள் தேவை என்பதனை இலங்கை அரசிற்கும்

-இலங்கை ஜனநாயகத்தில் எங்களுக்கு இனிமேல் நம்பிக்கை இல்லை என்பதனை சர்வதேச உலகிற்கும் பெண்கள் வாக்களிக்காமல் விடுவதன் மூலம் அமைதியான வழியில் ஆனால் சாட்டையடி போல் காட்ட முடியும்

2.வந்து தமிழீழம்,தமிழர் உரிமைகள் மற்றும் தமிழர் ஒற்றுமையின் பலம் பற்றி இரண்டு வார்த்தைகள் உணர்வோடு பேசி விட்டால் வடக்கு கிழக்கு மக்கள் வாக்குகளை அள்ளிப் போடுவார்கள் எத்தகைய கொடிய அவலங்களில் வாழ்ந்தாலும் என்று காலம் காலமாக நடந்து கொள்ளும் தமிழ் அரசியலாளருக்கும் நல்லதொரு அனுபவமாக இது அமையக் கூடும்

-குறைந்த பட்சம் மக்களுக்கு வாக்குகளை கொடுத்து விட்டு அரசியல் வரப்பிரசாதங்களை அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே பெற்றுக் கொள்ளும் நாம் அதனைச் சரிவரச் செய்ய வேண்டும் என்கிற எண்ணப்பாட்டினை மையப்படுத்த உதவும் jaffna_protest_2013_Ms Jeyakumari

அடக்குமுறையாளர்களிடம் இருந்து அடிப்படை அரசியல் உரிமைகளான விடுதலையும் சுதந்திரத்தையும் அடிப்படை மனித உரிமைகளையும் கேட்டு நிற்கும் ஒரு இனத்திற்கு தலைமை தாங்கும் தலைவர்களும், அவர்களைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்களும் அந்த மக்கள் மீது அடக்குமுறையாளர் -களால் நிகழ்த்தப்பட்ட ,நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் மனிதப் பேரவலங்கள் குறித்து , அல்லது குறைந்த பட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் குறித்து எதுவும் கேட்க முடியாது அல்லது பேச முடியாது போனால் ; அவர்களை மக்கள் தலைவர்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது … !!

அதே போல் இத்தகைய அரசியல் தலைவர்கள் அரை நூற்றாண்டிற்கும் மேலாக, அந்த இனவாத அரசினால் ஜனநாயக முறை என்ற போர்வையில் நடாத்தப்படும் தேர்தல்களில், தமிழ் மக்களுக்கு அனைத்தையும் பெற்றுத் தருகிறோம் என்கிற நடக்க முடியாத வாக்குறுதிகளை (போலி கோஷங்களை ) முன் வைத்து மக்களின் வாக்குகளை பெரும்பான்மையாக பெற்று பாராளுமன்றம் செல்வதும் அர்த்தம் அற்றதே .. !!!

அதன் பின்னர் ஜந்து ஆண்டுகள் வரைக்கும் பயணங்களும்,பயனற்ற பேச்சுக்களும் என்று அவர்கள் காலம் போவது மட்டும் தான் மிஞ்சுகிறது…மிஞ்சியது.. !

வாக்களிப்பது ஜனநாயகம் என்றால்,

ஜனநாயக முறைப்படி வாக்களித்த மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்க முடியாது என்றால்,

குறைந்த பட்சம் ஜனநாயக அரசு ஒன்று அமைவதற்கு வாக்களித்த அந்த மக்கள் உயிர் அச்சுறுத்தல் இன்றி பாதுகாப்பாக தாம் வாக்களித்த நாட்டில் வாழ முடியாது என்றால்,

அத்தகைய ஒரு பாதுகாப்பை தனது நாட்டு குடிமக்கள் என்று அந்த அரசாங்கம் வழங்காது விட்டால்,

அத்தகைய அரச பயங்கரவாதமும் அடக்கு முறைகளும் இடம் பெறும் தமிழர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பெண்களும் வாக்களிப்பதன் மூலம் இலங்கையில் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை ,இதுவோர் ஜனநாயகம் மலர்ந்த நாடு என்று ஏனைய ஜனநாயக நாடுகளுக்கு நிரூபிக்கப் போகின்றோமா ???

இதன் மூலம் ஜனநாயக முறையில் இயங்கும் உலகின் 192 நாடுகள் ஜ நா மன்றின் சாசன விதிகளை ஏற்றுக் கொண்டுள்ள 86 நாடுகளும் இணைந்துள்ள ஜ நா அவைக்கு இலங்கையில் பேரினவாதிகளின் நலன்களுக்காக நடாத்தப்படும் பொதுத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் ஒருவர் விடாது வாக்களித்து காட்டப் போவது என்ன ???

(வாதத்திற்கும் உண்மையாகவும் வேண்டு மானால் சொல்லலாம் தேர்தலில் பங்கு பற்றுவதன் மூலம் தமிழர் நிலங்களை தக்க வைத்துள்ளோம் என்று. ஆனாலும் ஆட்சி நடாத்துபவர்கள் அவர்களே)Traitors National Alliance

பிற்போடப்பட்ட விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் சபைக்கு சமர்ப்பிக்கப்பட விருப்பதாக சொல்லப்பட்ட போதிலும், அண்மையில் கசிந்துள்ள தகவல்களின் படி ஜ நா அதில் இருந்து பின்வாங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சமயத்தில்,

 

சுமூகமான தேர்தல் ஒன்றும் அதிலும் தமிழ் மக்கள் அனைவரும் சிங்கள அரசு ஒன்று நடாத்தும் தேர்தலை புறக் கணிக்காது வாக்களிப்பதன் மூலம் ‘உள்ளக விசாரணை ஒன்றை ஆதரித்து பின்வாங்கல் என்ற ஜ.நா முடிவை’ நாம் பரி பூரணமாக ஆதரித்து எம் தலையில் நாமே மண் அல்ல கரும் கல்லை அள்ளி கொட்டிக் கொள்ளப் போகிறோம்..

 

எனவே வாக்களிப்பவர்களை வாக்களிக்க விட்டு பெண்களும் தாய்மார்களும் தங்களுக்கான நீதி இந்த நாட்டில் இல்லை சர்வதேசம் அதனை முன்னின்று பெற்றுத் தர வேண்டும் என்கிற இலக்கினை உறுதியாக பற்றிக் கொள்ள விரும்பினால், அனைத்து பெண்களும் தாய்மார்களும் இந்த தேர்தலில் வாக்களிக்காது ஜ நா மன்றில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அமைதியான அஹிம்சை வழியில் வலுப்படுத்துவோம்…