நீதிபதிகள் நியமனம் - உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்

சனி அக்டோபர் 17, 2015

நீதிபதிகள் நியமனம் - உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம் கொலீஜியம் முறையில் வெளிப்படைத் தன்மை வேண்டும்  விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை
தொல்.திருமாவளவன் அறிக்கை


நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஆணையம் ஒன்றை மைய அரசு அமைத்தது.  ஏற்கனவே நடைமுறையிலிருந்த ‘கொலீஜியம்’ முறையை மாற்றி தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் நீதிபதிகளை நியமிப்பதற்கு கடந்த 2014ஆம் ஆண்டு அரசியல் திருத்தச் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.  

 


இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.  அதாவது, நீதிபதிகள் நியமனத்தில் நீதித்துறையின் சுதந்திரமான நடைமுறைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆணையம் அமையும் என்றும், குறிப்பாக, அரசியல் தலையீடுகள் உருவாகும் என்றும் அதனால் இந்த ஆணைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும் அம்மனுவில் கூறப்பட்டது.  அரசியல் தலையீடுகளின்றி, சுதந்திரமான முறையில் நீதித் துறையைச் சார்ந்தவர்களே, நீதிபதிகளை நியமனம் செய்யும் வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த கொலீஜியம் முறையை மீண்டும் அனுமதிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டது.

 

 
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு நேற்று (16-10-2015) தீர்ப்பு வழங்கியுள்ளது.  நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அமைந்துள்ளது என்றும் எனவே இச்சட்டம் செல்லாது என்றும் கொலீஜியம் முறையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.  அத்துடன், இவ்வழக்கு விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் பேரமர்வுக்கு மாற்ற இயலாது என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நீதிபதிகளின் நியமனத்தில் அரசியல் தலையீடுகளை முறியடித்துள்ளது.  எனவே, விடுதலைச் சிறுத்தைகள் இத்தீர்ப்பை வரவேற்கிறது.  

 


தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அவருக்கு அடுத்த இரண்டு மூத்த நீதிபதிகள் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் அத்துடன் இரண்டு முக்கிய நபர்கள் என 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதாவது, நீதித் துறையிலிருந்து மூவர், நீதித் துறைக்குத் தொடர்பில்லாத அரசியல் தளத்திலிருந்து மூவர் என நீதிபதிகளை நியமிப்பதற்கான குழு அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.  இது அரசியல் தலையீட்டிற்கு இடமளித்தது.  இதனால் நீதித்துறையின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும், ஆளுங்கட்சியினரின் ஆதிக்கம் மேலிடும் என்றும் அச்சம் உருவானது. 

 


இந்நிலையில்தான் உச்சநீதிமன்றம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை செல்லாது என அறிவித்துள்ளது.  நீதித் துறையிலும் அரசியல் தலையீடுகள் மறைமுகமாக இருக்கவே செய்கின்ற என்கிற வேதனை வெகுமக்களிடையே உண்டு.  இந்நிலையில் அரசியல் தலையீட்டை சட்டப்பூர்வமாக அனுமதித்ததை நீதித் துறையின் மீதான நம்பகத் தன்மையை முற்றிலும் பாழ்படுத்திவிடும். எனவே, உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதேவேளையில், கொலீஜியம் என்கிற பெயரால் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் கொண்ட குழு வெளிப்படைத் தன்மை இல்லாமல் நீதிபதிகளை நியமித்தல் கூடாது என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.  

 

 
கொலீஜியம் முறையில் சனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் வெளிப்படைத் தன்மைக்கு இடமளிக்க வேண்டுமென்றும் அதற்குரிய வழிகாட்டுதலை வழங்க மைய அரசு முன்வர வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.