நீராகாரத்தையும் நிறுத்த தமிழ் அரசியல் கைதிகள் முடிவு!

ஒக்டோபர் 08, 2017

 அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் நீராகாரத்தையும் நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான மாகாணசபை உறுப்பினர்கள் நேற்று உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை சந்தித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
 
மாகாணசபை உறுப்பினர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த அனுராதபுர சிறைச்சாலையில்வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இது தொடர்பாக தகவல் வெளியிடுகையில், “அனுராதபுர சிறைச்சாலையில் 21 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்ணாவிரதம் இருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகள் 58 தடவைகள் வவுனியா மேல் நீதிமன்றில் விசாணைக்கு திகதி குறிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவில்லை.

இந்த சூழ்நிலைக்கு அரசு தரப்பு சாட்சிகளான 67 பேரில் 3 பேர் அரச படைகளை சேராதவர்கள். ஆரம்பத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வரவில்லை என்று வழக்கினை ஒத்தி வைத்தார்கள். தற்போது திடீரென்று அனுராதபுர மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளனர்.

இதனை எதிர்த்து தான் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் நீர் ஆகாரம் இன்றி போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்தனர். அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.அதற்கு அவர்கள் வழங்கிய காரணம் நியாயமானது என்று தெரிவித்தார்.
 

செய்திகள்