நீர்த் தேக்கத் திட்டத்தை நிறைவேற்றுவோம் - சீமான் உறுதி

திங்கள் அக்டோபர் 05, 2015

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் தேவாலா காடுகளில் உற்பத்தியாகிறது பாண்டியாறு. சிரபுஞ்சிக்கு அடுத்ததாக இந்தியாவில் அதிகமாக மழை பெய்யும் இடம் தேவாலா.

 

இங்கே ஆண்டுதோறும் தோராயமாக 7,000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இங்கு உற்பத்தி ஆகும் பாண்டியாறுக்கு நீர் ஆதாரமாக இருப்பது தேவாலா, பந்தலூர் மற்றும் ஓவேலிப் பகுதிகள். பாண்டியாறு மேற்கு நோக்கி சென்று கேரளாவில் உள்ள சாலியாற்றில் கலந்து நிலம்பூர் வழியாக கள்ளிக்கோட்டைக்கு அருகில் கடலில் பயன்பாடு இல்லாமல் கலந்து வருகிறது. தமிழ்நாட்டில் உருவாகி கேரளக் கடலில் கலக்கும் பாண்டியாறை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பார்வையிட்டார். 


 
அங்குள்ள மக்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் "1967 ஆம் ஆண்டில் திராவிட கட்சிகளின் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கேரளா அரசுடன் இணைந்து போடப்பட்ட பாண்டியாறு-பொன்னம்புழா நீர்த் தேக்கத் திட்டம் வனச்சூழல் மற்றும் கேரளா அரசின் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்குள்ள காடுகளில் அதிக தீமை விளைவிக்கக்கூடிய வெளிநாட்டிலிருந்து வந்த அந்நிய செடி பார்த்தீனியம் மண்டிக்கிடக்கிறது. காட்டிலும் விலங்குகளுக்கு நீர்ப் பற்றாக்குறை இருக்கிறது. அதனாலேயே யானைகளும் மற்ற விலங்குகளும் விவசாய நிலையங்களை தேடி வரும் சூழல் உருவாகிறது. அதை எல்லாம் சரிசெய்யாமல், பாண்டியாறைத் திருப்பினால் வனச்சூழல் கெடும் என்பது ஏற்கக்கூடியதல்ல. வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பினால் விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும்.

 

நீராதாரம் மட்டும் இன்றி மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பும் இருப்பதால் இரு மாநிலங்களும் பயன்பெறுமென்பதால் கேரள அரசுடன் தமிழக அரசு சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் - மின்சாரம் பங்கீடு என்ற அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்திற்கு 18 டி.எம்.சி அளவிற்கு தண்ணீரும் அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஒரு பங்கும் கிடைக்கும் .பவானி பாசனங்களுக்கு இருந்து வரும் நீர்ப்பற்றாக்குறையும் நீங்கும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றவும் இது ஏதுவாக இருக்கும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாண்டியாறு-பொன்னம்புழா நீர்த் தேக்கத் திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவோம்" என்றார்.