நெல்சன் மண்டேலாவை காட்டிக் கொடுத்த அமெரிக்க உளவுத்துறை

புதன் மே 18, 2016

தென்னாப்பிரிக்க நாட்டில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் நெல்சன் மண்டேலா. அதற்கு முன்னர் அந்நாட்டை ஆண்ட வெள்ளையர் ஆட்சியின் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இவர் இருந்தார். தொடக்கத்தில் வன்முறையற்ற அறப்போராட்ட வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கி ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார். 

மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக இந்த படையினர் நடத்தினர். அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 1962-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மண்டேலாவின் வாழ்க்கையின் 27 ஆண்டுகாலம் ராபன் தீவில் உள்ள கொடூரமான சிறைச்சாலையின் சிறிய அறைக்குள் கழிந்தது.

1990-ல் அவரது விடுதலைக்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் அமைதியான முறையில் புதிய மக்களாட்சி மலர்ந்தது. 1994 முதல் 1999-ம் ஆண்டுவரை அந்நாட்டின் ஜனாதிபதியாக திகழ்ந்த நெல்சன் மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மண்டேலா 2008-ம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், மருத்துவ ஓய்வில் இருந்த அவர் கடந்த 5-12-2013 அன்று தனது 95-வது வயதில் காலமானார்.

இந்நிலையில், நெல்சன் மண்டேலாவை வெள்ளையர் அரசிடம் அமெரிக்க உளவுத்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி காட்டிக் கொடுத்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் மண்டேலாவின் வாழ்வின் முக்கிய திருப்புமுனைகளை மையமாக வைத்து மண்டேலாவின் துப்பாக்கி (Mandela's Gun) என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் விரைவில் திரையிடப்படவுள்ள இந்தப் படத்தில் சில திருப்புமுனை தகவல்கள் பதிவாகியுள்ளது.

இந்தப் படத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஜான் இர்வின் என்பவர் இயக்கியுள்ளார். நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டது எப்படி? என்பது தொடர்பான ஆய்வில் ஜான் இர்வின் முன்னர் ஈடுபட்டார்.

இதுதொடர்பான தகவல்களை சேகரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவர் அமெரிக்காவுக்கு சென்றார். நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டபோது தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் அமெரிக்க துணை தூதராக பணியாற்றியவரும், அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ.வின் உளவாளியுமான டொனால்ட் ரிக்கர்ட் என்பவரை ஜான் இர்வின் சந்தித்தார். அப்போது சில முக்கிய தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். 

ஜான் இர்வினிடம் அவர் கூறியதாவது:-

வெள்ளையர் அரசுக்கு எதிராக மிக மூர்க்கமாக போர் நடத்துவதற்கான திட்டங்களை மண்டேலா தீட்டி வந்தார். அப்போது அவர் முற்றிலுமாக ரஷியாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ரஷ்யாவின் உதவியுடன் மிகப்பெரிய உள்நாட்டுப் போரை நடத்த அவர் தயாராகி வந்ததை டர்பன் நகரின் அமெரிக்க துணைத்தூதர் என்ற முறையில் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

தென்னாப்பிரிக்காவில் ரஷியப் படைகள் கால்பதித்தால், அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அந்தப் போரில் குதிக்க வேண்டியதாகிவிடும். அது மிகப்பெரிய நரகமாகவும், பேரழிவாகவும் அமைந்துவிடும். ஆகவே, அந்தப்போரை தடுக்க வேண்டும். மண்டேலாவை தடுத்தே ஆக வேண்டும் என நாங்கள் (அமெரிக்கா) விரும்பினோம்.

எனவே, இவ்விவகாரத்தில் நான் நேரடியாக தலையிட்டேன். 1962-ம் ஆண்டு டர்பன் நகரில் இருந்து ஜோகனஸ்பர்க் நகரத்துக்கு நெல்சன் மண்டேலா பயணம் செய்வது தொடர்பாக எனக்கு கிடைத்த ரகசிய தகவலை அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. மூலம் தென்னாப்பிரிக்க அரசுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்தேன்.

இதையடுத்து, டர்பனில் இருந்து ஜோகனஸ்பர்க் நகருக்கு ரகசியமாக காரில் சென்றுகொண்டிருந்த அவரை 5-8-1962 அன்று அரசுப் படைகள் வழிமறித்து, கைதுசெய்து சிறையில் அடைத்தன.

மேற்கண்டவாறு டைரக்டர் ஜான் இர்வினிடம் டொனால்ட் ரிக்கர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அடுத்தவாரம் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகவுள்ள மண்டேலாவின் துப்பாக்கி (Mandela's Gun) படத்தின் சிறப்பம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க உளவுப்படை தொடர்பான மேற்கண்ட அதிமுக்கிய ரகசிய தகவல்கள் டைரக்டர் ஜான் இர்வினுக்கு பரிமாறிய டொனால்ட் ரிக்கர்ட் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.