பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Sunday November 26, 2017

பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவுக்கூட்டத்தில் உள்ள ஹண்டர் தீவு பகுதியில் இன்று காலை (உள்ளூர் நேரப்படி) 4:40 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுகோலாக பதிவானது. ஹண்டர் தீவு பகுதிக்கு 200 கி.மீ. தொலைவில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.