பசுமை வழிச்சாலையின் பயன்பாடு தெரியாமல் எதிர்க்க கூடாது !

வியாழன் ஜூலை 05, 2018

சேலம் சென்னை இடையே அமையவுள்ள 8 வழிச்சாலையின் திட்டம் மற்றும் பயன்பாடு குறித்து முழுமையாக அறியாமல் அதனை எதிர்க்க கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலையை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. அதிகமான நிவாரணம், மாற்று நிலம் என பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்தாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த திட்டம் எதிர்ப்பையே சம்பாதிக்கிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய த.மா.கா.வின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா, திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் தெரியாமல் அதனை எதிர்க்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், இரு பெருநகரங்களுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த சாலையால் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் எனவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் கருத்து கேட்ட போது பல்வேறு வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கூறியுள்ளார்.