படகு கவிழ்ந்து விபத்து - 2 ரோஹிங்கியா அகதிகள் பலி!

ஒக்டோபர் 09, 2017

மியான்மர் நாட்டிலிருந்து வங்காளதேசத்திற்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் தப்பிச் சென்ற போது படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் தப்பிச் சென்ற ஒரு படகு தெற்கு வங்காளதேச பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை வங்காளதேசம் எல்லைப் பாதுகாப்பு படையினர் மீட்டனர். 

இந்த விபத்தில் சிக்கிய 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆற்றில் மூழ்கிய மேலும் சிலரை தேடும் பணிகளில் வங்காளதேச கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகள்