படகு வழியாக வந்தால் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவீர்கள்!

வியாழன் சனவரி 10, 2019

ஆஸ்திரேலியாவின் எல்லைகள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு புதிய கட்டளை அதிகாரியாக  மேஜர் ஜெனரல் கிரெயிக் புரினி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், படகு வழியாக வர முயிற்சிப்பவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

 

அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில்,“படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குப் பயணிக்கும் ஒருவருக்கான ஒரு சாதாரண செய்தி ஒன்று என்னிடம் உண்டு. 

 

எனது அதிகாரத்தின் கீழ், சட்டவிரோத புலம்பெயர்வுக்கு ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடியபடியே இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சட்டவிரோத படகுப்பயணத்திற்கு நீங்கள் முயற்சித்தால், நீங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, நீங்கள் புறப்பட்டு வந்த நாட்டுக்கு அல்லது உங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவீர்கள்,” எனக் கூறியுள்ளார். 

 

கரையோரங்களைப் பாதுகாப்பது மற்றும் கடலில் இறப்புகளைத் தடுப்பது குறித்து ஆஸ்திரேலியா கடுமையாக இருப்பதாகவும் இக்கொள்கை மாற்றமடையாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 

2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்ஹி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை எந்த பரிசீலனையுமின்றி முழுமையாக நிராகரித்து வருகின்றது. கடந்த காலங்களில், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து  படகு வழியாக ஆஸ்திரேலியாவை அடையும் முயற்சிகளை ஈழத்தமிழ் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் மேற்கொண்டு இருக்கின்றனர். 

 

“வருடத்தின் ஒவ்வொரு நாடுகளும் ஆஸ்திரேலியாவின் கரையோரங்கள் கண்காணிக்கப்படுகிறது.  ரோந்து செல்லப்படுகிறது மற்றும் பாதுகாக்கப்படுகிறது. 

 

அத்துடன் எங்கள் கரையோரப் பாதுகாப்பு அரண்கள் முன்னரை விடவும் உறுதியாக இருக்கின்றன,” என தற்போதைய எச்சரிக்கையில் மேஜர் ஜெனரல் கிரெயிக் புரினி ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை உறுதிச் செய்துள்ளார். 

 

கடந்த செப்டம்பர் 2013 முதல் ஆஸ்திரேலியாவின் தலையீட்டின் மூலம் ஆட்கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 614 பேர் கைதாகியுள்ள்னர். இதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் நடந்துள்ளன. இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.