படுகொலைக் கரங்களுடன் இணையப்போகும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்

சனி பெப்ரவரி 24, 2018

ஆணவம் ஒரு மனிதனை அழித்துவிடும் என்பதற்கு அமைவாக பெரியோர் வாக்கு என்றும் பொய்க்காது. அதேநிலைதான் இன்று கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தேசியத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சியானது சிங்கள பேரினவாத கட்சிகளுடனும், உலக வல்லரசுகளுடனும் கூட்டிணைந்து கொண்டு தமிழ் மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டமை தேர்தலில் தோல்விக்கான முதல் காரணம் எனலாம்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள வெட்டுக்குத்து, சிங்கள பேரினவாத சக்திகளினதும், வல்லரசுகளினதும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அழுத்தங்கள், ஒரு சில தனிப்பட்ட நபர்களின் ஏதேச்சதிகரமான முடிவுகள் போன்றவையும் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த காலங்களில் வாக்களித்த மக்களை ஒரு பொருட்டாக கவனத்தில் கொள்ளவில்லை. நூற்றுக்கு 60 தொடக்கம் 70 வீதம் வாக்களிப்பது கிராமப்புற மக்கள். ஆனால், அவர்கள் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதியிடம் வருகைதருவது மிகவும் குறைவு. மக்கள் பிரதிநிதிகள் மூலமாக நன்மையடைவது நகரப்புறத்தில் வாழ்கின்ற அரச உத்தியோகத்தர்கள். ஆனால் இவர்கள் வாக்களிக்கும் விகிதம் மிகக்குறைவாகும்.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 70 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான மா.உதயகுமார் தெரிவித்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒட்டுக்குழுக்கள் ஆயுதமு னையில் மக்களை மிரட்டி வாக்களிக்க வைத்ததுடன், தேர்தல் ஜனநாயக ரீதியாக இடம்பெறவில்லை. எனினும், தேர்தல் களை கண்காணிக்கும் தரப்பினர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது, சிறீலங்காவின் அதிபரை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் போன்று நடவடிக்கைகள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அதுமாத்திரமல்ல, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆயுதக்குழுக்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து களமிறக்கப்பட்டார்கள். இம்முறை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டு சிங்கள பேரினவாத சக்திகளுடன் இணைந்து தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக தமிழ் பிரதேச சபையான ஆலயடிவேம்பு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டபோது, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் அவர்கள், தமக்கு வழங்கும் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறு சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு வாக்குசேகரிக்கும் நடவடிக்கையிலும் தமிழரசுக் கட்சி ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. இது அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலவரத்தை பச்சையாகக் காட்டுகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி சில இடங்களில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலும், சில இடங்களில் அவர்களின் வாக்கு வங்கி சரிவடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இரட்டை அங்கத்துவத் தொகுதியான பட்டிருப்பில் சுமார் 6500 வாக்குகள் குறைவடைந்துள்ளன. தமிழ் மக்கள் சார்ந்த நலன்களில் இக்கட்சி எதிர்காலத்தில் நடவடிக்கையில் ஈடுபடவில்லையயன்றால் கட்சியின் நாமம் கூட இல்லாமல் அழிந்துவிடும். தேர்தல் காலங்களில் இவ்வாறான துரோகத் தனமான செயல்களில் ஈடுபட்டதுமட்டுமின்றி, தேர்தலுக்குப் பின்பும் தமிழ் மக்களுக்கு எதிரான துரோகச் செயலில் இறங்கியுள்ளது.

அதாவது, தனித்து ஆட்சி அமைக்க முடியாதவாறு திண்டாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தேர்தலில் ஒரளவு ஆசனங்களைப் பெற்ற தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக கருத்துக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அதாவது, தமிழ் மக்களுக்கு எதிராக வெள்ளை வான் கடத்தல், காட்டிக் கொடுத்தல், தமிழ் பெண்களை அவமானப்படுத்திய மொத்தத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்த தரப்புக்களான, டக்ளஸ், பிள்ளையான், கருணா, போன்ற தேசத் துரோகிகளுடன் பேரம் பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறான செயற்பாடு இடம்பெறுமாகயிருந்தால், தற்போது இருக்கும் ஆதரவைக் கூட எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்துவிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இதற்கு சில சிவில் அமைப்புக்களும் துணைபோகின்றதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. இந்த வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் சிவில் அமைப்பொன்று பகிரங்கமான ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது. அதாவது அவர்கள் கூறுவது, கடந்த கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பில் சகோதர இனத்தவர்களை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைத்ததனால் ஏராளமான இழப்புக்களை சந்திக்க நேரிட்டதாக கூறியதுடன், தற்போது வெற்றியடைந்துள்ள தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அறைகூவலை வெளியிட்டுள்ளனர்.

அறிவுரை கூறமுற்படும் இவ்வாறான சிவில் அமைப்புக்கள் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்பாக தமிழ் மக்களின் குறைநிறைகளை ஆராய்ந்து அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மிகவும் முக்கியமான விடயம், மண்மீட்பு போராட்டம், காணாமல் போனவர்களின் போராட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயம் போன்றவற்றில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்ற இந்த அறிவுரையை ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தரப்பினருக்கு வழங்கவில்லை. இந்நிலையில், இரத்தக்கறை படிந்த படுகொலைக் கரங்களுடன் இணையவேண்டும் என்று வெட்கமில்லாம் பகிரங்கமான கோரிக்கையை விடுக்கின்றார்கள்.

ஏன் இன்று தமிழர்களின் தாயகக் கோட்பாட்டுடன் ஒருமித்து பயணம் செய்யும் கட்சி உள்ளது. ஒரு நாடு, இரு தேசம் என்ற அடிப்படை கொள்கையுடள், யாருக்கும் சோரம் போகாது செயற்படும் கட்சிகளுடன் இணைந்து செயற்படக் கூடாது என்ற கருத்தை இந்த சிவில் அமைப்புக்கள் ஏன் முன்வைக்கவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் உலாவருகிறது. இதற்கு என்ன பதில் கூறப் போகின்றார்கள்?.

யாழ். மாவட்ட ரீதியாக 76 ஆசனங்களைப் பெற்று இரண்டாவது நிலையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்மையில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யும் கட்சி அல்ல என்பது அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள், இந்தியா மற்றும் அமெரிக்காவின் கைப்பொம்மையாக செயற்படுவதினால், தாயகக் கோட்பாடு பேசும் கட்சிகளுடன் இணைய ஒருபோதும் இத்தரப்பினர் அனுமதி வழங்கப் போவதில்லை. எனவே, எமது உரிமையை நாம் தான் போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டிய காலகட்டம் என்பதனால் மக்களின் நலன் சார்ந்த கட்சிகளை மக்கள் சக்தி கொண்டு பலப்படுத்த வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

நன்றி: ஈழமுரசு