பத்திரிகையாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு!

Thursday September 06, 2018

 மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களை வெளிக்கொண்டுவந்த பத்திரிகையாளர்களின் கைதுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.இந்த மோதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது.

 முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்டது.இதனால், அங்கிருந்து தப்பிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறி உள்ளனர்.

இந்த நிலையில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் நடந்த தாக்குதலையும், அதில் அந்த நாட்டு ராணுவத்தின் பங்கு இருந்ததையும் வெளிக்கொண்டு வந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வோ லோன் (32), யாவ் சோ ஓ (28) பத்திரிகையாளர்களுக்கு மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

இந்த நிலையில் இவர்களது கைதுக்கு மியான்மரில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலிருந்து எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது.அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க துாதர் நிக்கி ஹாலே கூறும்போது, "பத்திரிகையாளர்கள் கைதின் மூலம் மியான்மர் ராணுவம் அட்டூழியங்களை செய்திருப்பது தெளிவாகிறது. 

ஒரு சுதந்திரமான நாட்டில் மக்களுக்கு நாட்டில் நடப்பவை குறித்து தகவல் அளிப்பதும், தலைவர்களை பொறுப்புணர்வுடன் இருக்க வைப்பதும் ஊடகத்தின் கடமையாகும்.தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் இருவரும் அவர்களது பணியை செய்துள்ளனர். அவர்களுக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்க வேண்டும்” என்றார்.