பத்திரிகையாளர் கொலை வழக்கில் இருவர் கைது

செவ்வாய் நவம்பர் 15, 2016

பீகார் மாநிலத்தில் வெளியாகிவரும் பிரபல இந்தி நாளிதழில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றிவந்த தர்மேந்திரா சிங் என்பவர் ரோட்டாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் பகுதியில் வசித்து வந்தார்.

கடந்த 12-ம் தேதி காலை வழக்கம்போல் இங்குள்ள அமரா கிராமத்தில் உள்ள குட்டை பகுதி வழியாக தர்மேந்திரா சிங் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்மநபர்கள் அவரை சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.

குண்டுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவரை அப்பகுதிவாசிகள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே தர்மேந்திரா சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துணிகர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரோட்டாஸ் மாவட்ட போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான மனிஷ் சிங், ராதிகா ராமன் ஆகியோர் அமரா கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த கிராமத்துக்கு விரைந்துசென்ற போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர். சசாரம் மாவட்ட மத்திய சிறையில் அடைக்ப்பட்டுள்ள பிரபல ரவுடியான பப்பு சிங்கின் உத்தரவின்படி பத்திரிகையாளர் தர்மேந்திரா சிங்கை சுட்டுக் கொன்றதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.