பப்புவா நியூகினியா நாட்டில் சிறையை உடைத்து கைதிகள் தப்பி ஓட்டம்

May 16, 2017

பப்புவா நியூகினியா நாட்டில் சிறையை உடைத்து 70-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர். அப்போது சிறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவையொட்டி அமைந்திருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா ஆகும். இங்கு நாட்டிலேயே 2-வது மிகப்பெரிய நகரான ‘லே’ என்னும் நகரில் புய்மோ என்கிற மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறையில் இருந்த விசாரணை கைதிகளில் 70-க்கும் மேற்பட்டோர் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சிறையின் மதில் சுவரை உடைத்து அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது சிறை காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கைதிகள் அவர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து தப்பி ஓடிய கைதிகளை பிடிப்பதற்காக நாடு முழுவதும் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சிறையில் இருந்து தப்பிய கைதிகள் பதுங்கியிருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து அவர்களை சரண் அடையும்படி எச்சரித்தனர்.

மாறாக, கைதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 17 கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 3 பேர் உயிருடன் பிடிபட்டனர்.

இவர்களைத் தவிர 57 கைதிகள் போலீசாரிடம் சிக்காமல் தப்பி விட்டனர். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த தகவலை பப்புவா நியூகினியா போலீசார் நேற்று அதிகாரப் பூர்வமாக வெளியிட்டனர்.

இது குறித்து லே நகரின் போலீஸ் தலைமை அதிகாரி ஆன்டனி வாகம்பி கூறுகையில், “தப்பி ஓடிய கைதிகள் அனைவரும் துப்பாக்கி முனையில் கொள்ளை, கடத்தல், கார் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஆவர். இவர்கள் மீது ஏராளமான வழக்குகளும் உள்ளன. விசாரணை கைதிகள் என்ற அடிப்படையில்தான் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு இருந்தனர். தப்பிய கைதிகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என கூறினார்.

மேலும், “சிறையில் இருந்து தப்பிய கைதிகளுக்கு அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அடைக்கலம் கொடுக்கக்கூடாது. அப்படி யாராவது புகலிடம் அளித்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த ஆண்டும் இதேபோல் இந்த சிறையில் இருந்து ஏராளமான கைதிகள் தப்பி ஓடியதும், அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 கைதிகள் கொல்லப்பட்டதும் நினைவுகூரத்தக்கது ஆகும். 

செய்திகள்
புதன் May 24, 2017

ஐ.எஸ் அமைப்பு மஞ்செஞ்ரில் வைத்த குருரமான இலக்குக்கு பின்னர் பிரித்தானியா தனது பயங்கரவாத அச்சுறுத்தல் நிலையை அதியுச்ச நிலைக்கு நகர்த்தியுள்ளது.