பலம்பெற வேண்டும் என்பதற்காகவே உயர்ந்த உயிரையும் கொடுத்தார்கள்

சனி நவம்பர் 19, 2016

பலம்தான் ஓர் இனத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றது. இது எல்லா உயிருக்கும் பொருந்துகின்றபோதும், மனித இனம் பலத்தின் மூலமாகவே தமது இருப்பை இன்றுவரை தக்கவைத்துள்ளது. மனித தோற்றக் காலத்தில் இருந்து இன்றுவரை பலத்தின் மூலமாகத்தான் இனம் சார்ந்த மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் நிலைப்படுத்தியுள்ளது.

3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமிப்பந்தில் மூன்று விதமான மனிதர்கள் வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இன்று பூமியில் எஞ்சியிருப்பது ஒரு வகையான மனிதர் மட்டுமே. மற்றைய இரண்டு மனித இனங்களும் (நியாண்டர்தால்கள், டெனிஸோவன்கள்) இயற்கையாகச் சந்தித்த பேரழிவுகளைவிட, தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனத்துடன் முட்டிமோதிப் பலமிழந்து அழிந்து போயிருக்கலாம் என்பதுதான் ஆய்வாளர்களின் இறுதி முடிவாக இருக்கின்றது.

அத்துடன், இந்த மனித இனத்திற்குள்ளும் பல்வேறுபட்ட பிரிவுகள் தங்களுக்கு இடையில் போராடி வெற்றி பெற்றே தங்கள் இனத்தின் இருப்பை தக்கவைத்துள்ளன. எனவே, ஒரு மனித சமூகத்திற்குள் இருந்து இன்னொரு மனித சமூகம் வாழ்வதற்கும் பலம் என்பது கட்டாய தேவையாக இருக்கின்றது. இந்தப் பலத்தைத் தக்கவைப்பதற்காகவே வரலாறு முழுவதும் மனித இனம் பெரிதும், சிறிதும் என்று போர்களையும் அழிவுகளையும் சந்தித்து வந்திருக்கின்றது. பலத்தைத் தக்கவைப்பதற்காகவே பெருமளவிலான படையயடுப்புக்களும், நில ஆக்கிரமிப்புக்களும் உலகெங்கும் நடந்திருக்கின்றன. இன்றுவரை உலகெங்கும் தொடரும் போர்களுக்கும் பின்னால், இந்த பலத்தைத் தக்கவைப்பதே முதற்காரணமாக இருக்கின்றது. எனவே பலம்தான் ஓர் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்துகின்றது.

இந்த வரலாற்றின் உண்மையைப் புரிந்துகொண்டதனால்தான் தமிழினத்தைப் பலம்மிக்க இனமாக கட்டியயழுப்பினார் தமிழீழத் தேசியத் தலைவர். பலம் என்பது நம்பிக்கையில் இருந்தே கட்டியயழுப்பப்படுகின்றது. சிங்களப் பேரினவாதம் தமிழினத்தை அடித்தபோது எங்குமே திருப்பியடிக்கும் துணிவு தமிழினத்திற்கு வந்ததில்லை. தற்காத்துக்கொள்ள தப்பியோட மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால், தமிழர்களாலும் திருப்பியடிக்க முடியும் என்று, தமிழர் மனங்களில் நம்பிக்கையை விதைத்து, துணிவை வளத்தெடுத்தவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரும் அவரது தலைமையை ஏற்று விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த மாவீரர்களும்தான்.

தமிழர்களின் இந்தப் பலம், அவர்களுக்கான தேசத்தை ஒருநாள் மீட்டெடுத்துக்கொடுக்கும் என்பதைப் புரிந்துகொண்ட உலகம், ஒன்று சேர்ந்து அந்தப் பலத்தை இன்று அழித்துவிட்டது. தமிழினம் மீண்டும் பலம்பெற்றுவிடக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இன்றும் அது இருக்கின்றது. பலம்பெறாத இனமாக வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதற்கே அது தமிழர்களுக்கு வழிகாட்டுகின்றது.

இழந்த பலத்தைத் தமிழர்கள் மீண்டும் பெற்றுவிடாதவாறு சிங்களப் பேரினவாத அரசும் அனைத்து அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமே இருகின்றது. இலங்கைத் தீவிற்குள் மட்டும் இந்த அச்சுறுத்தல்கள் நின்றுவிடவில்லை. தாயகத்திற்கு வெளியே வாழும் மக்களை தனது அச்சுறுத்தல் மூலம் சிங்களப் பேரினவாதத்தால் அடக்கிவிடமுடியாது என்று தெரிந்தும், தாயகத்தைக் கடந்தும் அதன் அச்சுறுத்தல் கரங்கள் தமிழர்கள் வாழும் உலகெங்கும் நீளுகின்றது.

இவற்றுக்கும் மத்தியில்தான், இவற்றையும் மீறித்தான் தமிழினம் மீண்டும் பலம்பெற்ற இனமாக மாறவேண்டும். பலம் என்பது ஆயுதம் மட்டுமல்ல. பொருளாதாரப் பலம், அரசியற் பலம் எனப் பல உண்டு. உலகத் தலைமைகளை அசைக்கும் பலத்துடன் எழும்போதே, தமிழினம் தனக்கான வெற்றியைப் பெறமுடியும். இழந்துபோன, இழந்துகொண்டிருக்கும் தாயகத்தை மீட்டெடுக்க முடியும்.

ஓர் இனம் பலமாக இருந்தால் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், தங்களைப் பாதுகாக்க முடியும், தங்கள் நிலத்தை மீட்கமுடியும் என்பதை நிரூபித்தவர்கள் யூத இனத்தவர்கள். தங்கள் தாய் மண்ணை இழந்து பூமிப் பந்தெங்கும் கட்விழ்ந்த நெல்லிக்காய்போல் சிதறியபோதும், ஒடுக்குமுறையாளர்களின் கைகளில் சிக்கி பேரழிவுகளைச் சந்தித்தபோதும், அரசியல், பொருளாதார ரீதியாக ஒன்றிணையும் அவர்களின் பலம்தான் அவர்களுக்கான தேசத்தை கட்டமைத்துக் கொடுத்தது. இன்றுவரை அவர்களின் தேசத்தில் எதிரிகள் யாரும் கைவைக்கமுடியாமல் திணறுவதற்கும் அவர்களின் தக்கவைக்கப்பட்ட பலம்தான் காரணம்.

தங்கள் இனத்தின் பலத்தைத் தக்கவைப்பதற்காக போராடி வீழ்ந்தவர்களை உலகம் மதிக்கின்றது. அவர்களுக்காக ஆண்டுதோறும் வீரவணக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில்தான் தமிழீழ தேசமும் தங்கள் மாவீரர்களுக்காக ஆண்டு தோறும் எழுச்சி கொள்கின்றது.

தமிழ் மக்கள் பலமான இனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அத்தனை ஆயிரம் மாவீரர்களும் விடுதலைத் தீயிலே தங்களை ஆகுதியாக்கினார்கள். அவர்களின் கனவை வென்றெடுக்க உலகத் தமிழினம் பலம்கொண்ட இனமாக தன்னைக் கட்டமைக்கவேண்டும். அதன் மூலமே அந்த மாவீரர்களின் கனவை நனவாக மாற்றமுடியும்.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு