பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு சம்பந்தனும் ஒரு காரணம் -கஜேந்திரன்.

May 02, 2017

முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருவர் என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன். நாங்கள் கொல்லப்பட்டாலும் எங்களது கொள்கை உறுதியிலிருந்து விலக மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வு நேற்றைய தினம் சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்குள் உட்படாமல் எமது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பே அன்றைய தினம் எம்மை பாதுகாத்ததிருந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை கூட தமிழ் மக்கள் பக்கம் திருப்பியவர்கள் தான் எமது தேசிய இயக்கம். இவ்வாறு வராலாற்றை முதலில் ஆரம்பித்தவர்களில் ஒருவர் தான் முதலாவது கரும்புலி போராளியான மில்லர் ஆவார். இந்த மேதின கூட்டம் மில்லரின் தாயாரின் சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது.

இந்த நிலையில் அவர்கள் இல்லாத எமது மக்கள் வாழ்வு இருண்ட வாழ்வாகவே உள்ளது. மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு செல்வதற்காக போலாடிக்கொண்டுள்ளார்கள், வலிந்து காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்று அவர்களது உறவுகள் பரிதவித்து கொண்டுள்ளார்கள், அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது என ஏங்கி கொண்டுள்ளார்கள், பட்டதாரிகள் வேலை கோரி மாதக்கணக்கில் வீதிகளில் போராடி கொண்டுள்ளார்கள்,  விவசாயிகள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் சிங்கள தேசத்தால் திட்டமிட்டு தொழிலில் தோற்கப்படிக்கின்றார்கள்.

இவ்வாறான ஒரு சூழ்நிலைகளில் தான் நாம் தொழிளார் தினத்தை அனுஷ்டித்து வருகின்றோம். தமிழர் தாயகத்தில் தற்போதும் மனிதவுரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. ஆகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்க முடியாது என ஐரோப்பிய யூனியன் கூறி வந்த நிலையில், அந்த வரிச்சலுகையை வழங்குமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கை அமைச்சர்களோடு வெளிநாட்டிற்கு சென்று கோரியுள்ளார். இவ்வாறு ஒவ்வொருவராக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்.

சம்பந்தன் 2016 இல் தீர்வு என்றார் அது நடக்கவில்லை. இப்படி தொடர் பொய்களை சம்பந்தன் கூறி வருகின்றார். சில தினங்களுக்கு முன்னர் கூட டட்லி செல்வா ஒப்பந்தத்தை குமார் பொன்னம்பலம் ஏற்கவில்லை வரலாற்றை திரிபு படுத்தும் வகையில் பச்சை பொய் கூறுகின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் தான் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டியை கேட்கின்றார்கள், நாங்கள் சமஷ்டியை கேட்கவில்லை அதிகாரப்பகிர்வை தான் கேட்கின்றோம். என கூறி புலிகளை அழிப்பதற்கு ராஜபக்ச குடும்பத்தோடு கைகோர்த்தவர் தான் சம்பந்தன்.  2008 இல் யுத்தம் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது,

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டியை வலியுறுத்தி புலிகளையும் போராட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என சம்பந்தனிடம் கெஞ்சினேன் ஆனால் அதனை சம்பந்தன் செய்யவில்லை. இவ்வாறு பல இலட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு சம்பந்தனுமே காரணமாக உள்ளார். இவ்வாறு சம்பந்தனும் அவரது கூட்டாளிகளும் தமிழ்மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் நிலையில் தான் தமிழ் மக்கள் பேரவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டமும் உருவாக்கப்பட்டது. இதன்பின்னர் ஒற்றையாட்சியை ஆதரித்து வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தீர்வுத்திட்டம் ஒன்றை பொய்யாக உருவாக்கி வெளியிட்டிருந்தார்கள்.

இந்தியாவின் அடிவருடிகளாக செயற்படும் சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோர் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு தொடர்ந்தும் மக்கள் முன் வருவார்கள். தமிழர்கள் இனியாவது இந்த துரோகங்களின் பின்னராவது அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.  தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமானாலும் சுயநிர்ணயம் அடிப்படையில் தீர்வு எட்டப்பட வேண்டும். அதில் நாங்கள் உறுதியாக இருப்போம். நாங்கள் கொல்லப்பட்டாலும் எங்களது கொள்கை உறுதியிலிருந்து விலக மாட்டோம். ஆயிரம் ஆயிரம் போராளிகளின் தியாகங்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார். 

செய்திகள்