பழமையான பிரமிடுகளில் இருந்து 17 புதிய ‘மம்மி’கள்

May 14, 2017

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து நாட்டிலுள்ள பிரமிடுகளில் இருந்து 17 ‘மம்மி’களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து நாட்டிலுள்ள பிரமிடுகள் அடங்காத ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் தன்னுடன் புதைத்துக்கொண்டுள்ளது.

 பழமையான காலங்களில் அந்நாட்டை ஆண்ட மன்னர்கள் இறந்தவுடன் அவர்களது உடல்கள் பதப்படுத்தி இந்த பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ளனர். பதப்படுத்தி புதைக்கப்பட்ட இந்த உடல்களானது மம்மி என ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகிறது. எப்போது, இங்கு மம்மிகள் கண்டறியப்பட்டதோ, அப்போது முதல் இந்த பிரமிடுகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.

இந்நிலையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டவுனா காபால் மாவட்டத்தில் இருக்கும் பழமையான பிரமிடுகளில் 17 மம்மிகளை ஆராய்சியாளர்கள் கண்டறித்துள்ளனர். 

மம்மிகளுடன் தங்கத்திலான தகடுகளையும் கண்டறிந்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள தொல்லியல் நிபுணர்கள் ,” கண்டறியப்பட்ட மம்மிகள் அரச குடும்பங்களை சேர்ந்தது போல் இல்லை. ஆனாலும், இது ஒரு முக்கியமான, அவசியமான கண்டுபிடிப்பு. இப்பகுதியில் முதன்முறையாக மம்மிகள் கண்டறியப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் லுக்சோர் நகரத்தில் 3500 ஆண்டுகள் பழமையான 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்