பஸ்மாசுரன் சம்பந்தன் 

Wednesday January 09, 2019

தமிழர் தேசம் தனது பாதுகாப்பை முழுமையாக இழந்து பத்தாண்டுகளை எட்டப்போகின்றது. தமிழர் தேசத்தின் பாதுகாப்பாக, உறுதியாக, நம்பிக்கையாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று சிறீலங்கா இனவாதப் பேரரசு அழித்து முடித்ததன் பின்னர், தமிழர் தாயகம் தன் பலத்தை மட்டுமல்ல தன் சுயத்தையும் இழந்து வருகின்றது.

கடந்த பத்தாண்டுகளில் நிலங்களை மட்டுமல்ல, மொழி, கலாச்சாரம், பண்பாடு என தனது இன அடையாளத்திற்கான ஆணிவேர்களையும் மெல்ல மெல்ல தமிழினம் இழந்து வருகின்றது என்பதைப் புரிந்துகொள்ள அல்லது அறிந்துகொள்ள தமிழர்களுக்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படலாம். ஆனால் அப்போது தமிழர் தாயகம் முழுமையாக சிங்கள, பெளத்த மயமாக்கப்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சிதான் எஞ்சியிருக்கும்.

சிங்களம் சத்தமின்றி மேற்கொள்ளும் இந்த இனஅழிப்பில் இருந்து தமிழர் தாயகத்தை பாதுகாக்கும் பலமான சக்திகள் தமிழர்களிடம் இப்போது இல்லை. நம்பியிருந்த அரசியல் தலைமைகளும் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு சாமரம் வீசும் அடிவருடிகள் ஆகிப்போனதுதான் தமிழர்களின் அவலநிலை.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும், இலட்சக்கணக்கான மக்களும் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தது இழந்துபோன தங்கள் தேசத்தை மீட்டெடுத்து தங்கள் தலைமுறைகள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காகத்தான். சிங்களத்தின் ஒற்றையாட்சிக்குள் அடிமைப்பட்டு வாழ நினைத்திருந்தால் இத்தனை அவலங்களை தமிழர்கள் சுமந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்தும் சிறீலங்காவை விடுங்கள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இன்னும் நீதியைப் பெற்றுக்கொடுக்க இந்த உலகத்தினால் முடியவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதை விடுத்து அவர்களைப் பாதுகாப்பதில் சிறீலங்கா அரசு மட்டுமல்ல, சர்வதேச நாடுகளும் முயன்று வருகின்றன என்பதை அண்மையில் அவுஷ்திரேலியா செல்லவிருந்த சிறீலங்கா இராணுவத்தின் தளபதி ஒருவரை, அங்கு செல்லவேண்டாம் அங்கு சென்றால் புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தங்களால் அங்கு வைத்து கைது செய்யப்படலாம் என எச்சரித்து அவரது பயணத்தை சிறீலங்காவிற்கான அவுஷ்திரேலியத் தூதர் தடுத்து நிறுத்தியிருக்கின்றார் என்பதில் இருந்து அறியமுடிகின்றது.

இப்படியான சூழ்நிலைக்கு மத்தியில்தான் சிறீலங்கா அரசு தற்போது ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதற்கு முயன்றுவருகின்றது. சிங்கள தேசம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழர்களுக்கு சார்பான ஒரு யாப்பை வரைந்துவிடப்போவதில்லை என்பது உலகறிந்த உண்மை. ஆனால், ‘ஏக்கிய ராச்சிய (ஒற்றையாட்சி) என்ற கொள்கையுடன் வரையப்பட்டுவரும் இந்த யாப்பிற்கு ஆதரவு கொடுக்க முனைவது மட்டுமல்ல, அதனை தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ளவும் நம்பவும் வைப்பதற்கு பல ஏமாற்று  நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்ற சிங்களச் சொல்லே மூன்று மொழிகளிலும் இருக்கும். அதில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது என்றும் ‘ஏக்கிய ராஜ்ஜிய’வுக்குத் தமிழில் ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தைக்கூட இணைக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகக் கூறிவிட்டது. ஆனால், ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்றால் சமஷ்டி என்று இன்னமும் தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த ஏமாற்றுத் தனத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்களாக புலம்பெயர்ந்த தமிழர்களே இருக்கின்றார்கள். இதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீது கடும் சீற்றத்தில் இருக்கின்றது கூட்டமைப்பின் தலைமை.

அண்மையில் இலங்கை சென்றிருந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் சிறீலங்கா நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வோன் ஓர்டனிடம், கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மிகவும் திமிர்த்தனமாகக் கூறியிருக்கின்றார்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்டத்திற்கான பங்களிப்பை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். தனது மாவீரர் நாள் உரைகளில் கூட புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்பை பாராட்டிக் கெளரவித்தவர் அவர். ஆனால், அதே தமிழீழத் தேசியத் தலைவரால் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற மகுடத்தை இன்னும் கழற்றாமல் சூடிக்கொண்டிருக்கும் சம்பந்தன் அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருக்கின்றார்.

இந்த வேளையில், புராணக்கதை ஒன்றுதான் நினைவுக்கு வருகின்றது. அதனைச் சம்பந்தனுக்கு அர்ப்பணிப்பது பொருத்தமாக இருக்கும். அசுரர்களின் அரசனான பஸ்மாசுரன் என்பவர் சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்து வரம் ஒன்றைப் பெற்றார். அந்த வரம், தான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் உடனே சாம்பல் ஆக வேண்டும் என்ற வரம். தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பதுபோல் அதனை சிவபெருமானிடம் சோதிக்க எண்ணி அவரின் தலையில் கை வைப்பதற்காக அவரை துரத்தினார் பஸ்மாசுரன். அப்போது நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த திருமால் மோகினி அவதாரம் எடுத்து பசுமாசுரனை தனது அழகினால் மயக்கி காமம் கொள்ளச் செய்தார்.

மோகம் கொண்ட பஸ்மாசுரனை தன்னுடன் ஆடும்படி கூறி, மோகினி ஆடினாள். அவளுடைய நடன முறைகளை பின்பற்றி ஆடிய பஸ்மாசுரன் அவளின் ஆட்டத்தில் மயங்கி, தான் பெற்ற வரத்தினையும் மறந்து தன் தலையில் தானே கை வைத்தான். சிவபெருமான் தந்த வரத்தின்படி பஸ்மாசுரன் எரிந்தழிந்தான். தமிழ் மக்களின் அரசியல் தலைமையைத் தாங்குவதாக தலைக்கனம் பிடித்தாடும் சம்பந்தனுக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்பது உறுதி.

‘கொடும்பாவி சாகாதோ
கோடி மழை பெய்யாதோ...
மாபாவி சாகாதோ
மாரி மழை பெய்யாதோ...’
என்று  மழைவேண்டி தமிழர்கள் கொடும்பாவி கட்டியிழுத்து ஒப்பாரிப்பாடல் பாடுவார்கள். மாரி மழை முடிந்து, தமிழர்கள் அறுவடையும் முடிந்து பொங்கல் படைக்க தயாராகும் வேளையில், இப்போது இந்தப் பாடலின் ஞாபகம் ஏன் வந்து தொலைக்குதென்று எனக்குப் புரியும்.

உங்களுக்குப் புரியவில்லை என்றால் தமிழர் தாயகத்தின் அரசியல் தலையயழுத்தை மாற்றியயழுத முடியாது போய்விடும்.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தமிழர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, எதிர்பார்ப்பும் கூட. அந்த எதிர்பார்ப்பு நிறைவேற நாம் என்ன செய்யப்போகின்றோம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு இனியும் கூசா தூக்கித்திரியப் போகின்றோமா? என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல, தாயகத் தமிழர்களும் சிந்திக்கவேண்டும்.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு