`பாகுபலி' கூட்டணி உடைந்தது!

யூலை 26, 2017

பிரபாஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் மூலம் இணையவிருந்த `பாகுபலி' கூட்டணி நடிகை அனுஷ்காவால் உடைந்துவிட்டதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது.  `பாகுபலி' படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் இடம் பிடித்துள்ள பிரபாஸ் அடுத்ததாக `சாஹு' படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

பாகுபலி படத்தில் பிரபாஸ் - அனுஷ்காவுக்கு இடையேயான நெருக்கம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், பிரபாஸின் `சாஹு' படத்திலும் அனுஷ்காவையே நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது. 

இதையடுத்து அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வந்தது. மேலும் அனுஷ்கா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. 

இந்நிலையில், சாஹோ படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்ற புதிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. தமிழில் பெரிய படம் ஒன்றில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகி இருக்கிறாராம். எனவே `சாஹு' படத்தில் நடிக்க தேதி ஒதுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகுபலி கூட்டணி உடைந்துவிட்டதாக டோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது. வேறொரு படத்தில் இருவரும் ஜோடி சேராமலா இருந்துவிடுவார்கள் என்ற கேள்விகளும் வந்தவண்ணம் உள்ளன.

அனுஷ்காவின் தேதி கிடைக்காததால், `துவ்வடு ஜெகன்நாதம்' படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஜோடியாக நடித்திருந்த பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

இந்த படத்தை இயக்குனர் சுஜீத் இயக்கவிருக்கிறார். வம்சி மற்றும் பிரமோத்தின் யூவீ கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அமிதாப் பட்டாச்சார்யாவின் பாடல் வரிகளில், சங்கர் - எஹ்சான் - லாய் இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் ரிலீசாக இருக்கிறது. 

செய்திகள்