பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் நா. காமராசன்!

May 31, 2017

மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் திரைப்படங்களில் பாடல்கள் அத்தனையும் தவறாது வெற்றிபெறும். அதற்குக் காரணம், எம்.ஜி. ஆர். அவை உருவாவதில் தனிப்பட்ட விதத்தில் அதிகக் கவனம் செலுத்துபவர் என்பதும், அவர் திரைப்படப்பாடல்களின் கலை நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் என்பதும் திரைப்பட ஆர்வலர்கள் பலரும் கூறும் கருத்து. கலையுலகில் திறமையாளர்களை அடையாளம் கண்டு, தக்க வகையில் வாய்ப்பளித்து அவர்களை வளர்த்துவிடுவதும் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.

பாடுவது எம்.ஜி.ஆரே தான் என அடித்துச் சொல்லும் அளவிற்கு டி.எம்.எஸ்-சின் குரல் அவர் பாடல்களுக்குப் பொருந்தியது. இருப்பினும் அவருடன் கொண்ட கருத்து வேறுபாட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே. ஜே. ஏசுதாஸ் போன்ற பிற பாடகர்களைத் தனது பாடல்களைப் பாட நாடவேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. அவர்களது மென்மையான குரல் எதிர்பார்த்த அளவுக்கு அவரது குரலுடன் பொருந்தி வராத போதிலும், திரையுலக நாயகிகள் எம். ஜி. ஆரைக் கண்டு உருகி கனவு காணும் பாடல்களுக்கு அவர்களுடன் பாடுவதற்கு புதியவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். “கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும், “வீரமுண்டு வெற்றி உண்டு விளையாடும் களமிங்கே உண்டு வா வா என் தோழா” எனக் கோட்டையில் தனது கட்சிக் கொடியைப் பறக்கவிடும் வீரமுழக்கக் கொள்கைப் பாடல்களில் தானே நேரடியாக வாயசைக்கும் பொழுது மட்டும் வேறுவழியின்றி கம்பீரமான குரல் கொண்ட டி.எம்.எஸ். அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

அது போலவே கவியரசர் கண்ணதாசனுடன் கொண்ட கருத்து வேறுபாட்டில் பஞ்சு அருணாசலம், புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்ற பல புதிய திரையிசைப் பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். அந்த வரிசையில் ஒருவர் கவிஞர் நா. காமராசன். திரையுலக வாழ்வில் எம். ஜி. ஆர் அறிமுகத்தால் புகழடைந்த கலைஞர்களை மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள் என்று குறிப்பிடுவது வழக்கம். மறைந்த கவிஞர் நா. காமராசனும் அவ்வாறே மோதிரக் கையால் குட்டுப்பட்டு, 1970 களிலும் 80 களிலும் பல சிறந்த திரையிசைப் பாடல்களை வழங்கி பாராட்டைப் பெற்றார்.

கவிஞர்   நா. காமராசனின் முதல் பாடல் இடம் பெற்றது ஆகஸ்ட் 22, 1975 அன்று ஏ. ஜெகநாதன் இயக்கத்தில், ஆர். எம். வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில், எம். ஜி. ஆர். நடித்து வெளிவந்த “இதயக்கனி” என்ற படம். எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில் இவரது முதல் பாடலான “தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும்” என்ற காதல் பாடல் மூலம் தித்திப்புடன் இனிமையாகத் திரையுலகில் அறிமுகமானார் கவிஞர் நா. காமராசன்.

தத்துவப் பாடல்களிலும் இவர் சளைத்தவரல்ல.

“எட்டடி மண்ணுக்குப் போகும்வரை இந்தக்

கற்பனை ஊர்வல வாழ்க்கையிலே

யாரோ ஒருவன் தோட்டமிட்டான் அதில்

யாரோ பலனை அனுபவித்தார்

[...]

தூக்கமும் துன்பமும் தொடர்வதுண்டு இந்த

தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு இந்த

தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு”

என்பது “எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே” பாடலில் இடம் பெறும் தத்துவ முத்துக்கள்.

1990-கள் வரையிலும் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதிய நா. காமராசன் கலைமாமணி விருதுடன், சிறந்த பாடலாசிரியர் விருது, பாரதிதாசன் விருதுகளையும் பெற்றுள்ளார். பஞ்சவர்ணம் என்ற படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார். கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

நா. காமராசன் திரையுலகில் நுழைந்த காலம், தமிழ்த் திரையிசையும் புதிய மாற்றங்களை எதிர்கொள்ளத் துவங்கியிருந்த காலகட்டம். கிராமபோன், எல். பி. வினைல் இசைத்தட்டு, வானொலி போன்றவை அனலாக் ஒலியில் (analog sound) மட்டுமே பாடலை வழங்கிவந்த எல்லையைத் தாண்டிடேப் ரெக்கார்டர், கேசட் டேப், தொலைக்காட்சி போன்றவை டிஜிட்டல் இசையின் தொழில்நுட்ப மாற்றத்தில் திரையிசைப் பாடல்களை வழங்கத் துவங்கிய முக்கியத் திருப்பத்தைக் கொண்ட காலகட்டம் அது. பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு ஒரு குறிப்பிட்ட நேரம்தான் அமையும் என்பதைக் கடந்து எவரும் விரும்பிய நேரத்தில் பிடித்த பாடலைக் கேட்கும் வசதியும் ஏற்பட்டிருந்தது.

எம். எஸ். விசுவநாதனின் இசையில் நா. காமராசன் அறிமுகமானாலும் இவரது பாடல்கள் பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் மிகவும் பரவலாக மக்களைச் சென்றடைந்தன. இதற்குக் காரணம், எம். எஸ். விசுவநாதனின் இசைக் கோலோச்சிய காலம் எம்.ஜி.ஆர். சிவாஜி போன்றவர் படங்கள் குறைந்ததும் சுருங்கத் துவங்கியதும், இளையராஜாவின் இசைக்காலம் 1975 இல் இருந்து மலரத் துவங்கியதும் எனலாம். பெரும்பாலான கமலஹாசன், ரஜினி படங்களில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே. ஜே. ஏசுதாஸ் குரல்களில் இவரது பாடல்கள் வெளிவந்தன. ரஜினி படங்களில், இளையராஜா-ஏசுதாஸ்- நா. காமராசன் கூட்டணியில் இனிமையான பாடல்கள் உருவாகின.

ஒவ்வொரு தமிழ்த் திரையிசை ஆர்வலருக்கும் அவர்களது கருத்தைக் கவர்ந்த நா. காமராசன் பாடல்கள் இருக்கும். எனக்குப் பிடித்தது என நான் தேர்வு செய்தால் ஒரு தந்தை பாடும் தாலாட்டாக, கே. ஜே. ஏசுதாசின் குரலில் மிக மென்மையாக, அமைதியாக, இனிமையாகப் பட்டு போல இழையும் மிகச் சிறிய தாலாட்டுப் பாடல் எனது தேர்வாக இருக்கும்.

இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்

நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்

காத்திருப்பாள் என்று தேவதைக்கு

தென்றல் காற்றினிலே ஒன்றைத் தூது விட்டான்

புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ

சித்திர விழியோ அதில் எத்தனைக் கதையோ

அதில் எத்தனைக் கதையோ

ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ

மற்றொன்று எனக் குறிப்பிட விரும்பினால், அதுவும் கே. ஜே. ஏசுதாசின் குரலில் பதிவான, தூங்க அடம் பிடிக்கும் சிறுமியிடம் பாடும் தாலாட்டுப் பாடல் எனச் சொல்லலாம்.

முத்து மணிச் சுடரே வா

முல்லை மலர்ச் சரமே வா

கண்ணுறங்க நேரமானதே

கண்ணே என் பொன்னே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே

தன் வழி போனாளே…கனிமொழி எங்கே

அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு

தனியே பார்த்தாயோ…அவளும் வந்தாளோ

நான் தேடும் பொன்மாலை கண்டேனடி

நான் தேடும் பொன்மாலை கண்டேனடி

அசைந்து குலுங்கி சிரித்துச் சிரித்து

ஒளிந்த பதுமை நேரில் வந்தது…

உவமைக் கவிஞர் சுரதாவால் கவிதை உலகத்திற்கு அறிமுகமான நா. காமராசன், 1960-களின் இறுதியில் கவிதைகளை எழுதத் துவங்கினார். தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடிகளில் ஒருவரான இவர் மரபுக்கவிதைகள் எழுதும் கவிஞராக துவங்கி வசனக்கவிதை, புதுக்கவிதை, திரையிசைப் பாடல்கள் எனப் பலவிதப் பாடல்களையும் எழுதினார். தாமரை, முரசொலி, மன்றம், காஞ்சி, காதல், சுரதா, தீபம் ஆகிய பல பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்தன. உருவகங்களையும், உவமைகளையும், சிலேடைகளையும் தனது கவிதைகளில் சிறப்பாகக் கையாண்டார்.

“மிதமான உருவகமும் தகுதியழகோடு விளங்கும் பொருத்தமான வார்த்தைகளும் நா. காமராசன் பாடல்களின் சிறப்பு. கவிஞனுக்கே உரியக் கௌரவத்தோடு தம்மை முன்னிறுத்தி முந்திக்கொள்ளாமல் தம் பாடல்களின் ஜீவமொழியைத் திரைத்துறைக்கு வழங்கிவிட்டு ஓரமாக நின்றுகொண்டார்” எனக் கவிஞர் மகுடேஸ்வரனும், “தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா. காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது” என்று கவிஞர் வைரமுத்துவும் இவரது கவிதைகளின் சிறப்பைப் பாராட்டுகிறார்கள்.

தேனிமாவட்டம் போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் நா. காமராசன். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியின் மாணவரான இவர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களது மாணவர். 1964ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றவர். மாணவராக இருந்த முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்துவுடன் இணைந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை போராட்டக் காலத்தில் எரித்தவர். போராட்டத்தில் பங்கேற்றதால் காலில் விலங்கிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக நா. காமராசன் பணியாற்றிய பொழுது பிற வகுப்பு மாணவர்களும் பேராசிரியர்களும் இவர் உரையைக் கேட்க ஆர்வத்துடன் வகுப்பு வாயிலில் குழுமிவிடுவதுண்டு. பெரியார் காவியம் என்ற இவரது கவிதைத் தொகுப்பு பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. இவர் எழுதிய கறுப்புமலர் என்ற கவிதைகள் தொகுப்பு நூல் பாராட்டு பெற்ற இவரது பத்து நூல்களுள் ஒன்று.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் அதிகாரியாக, தமிழகத்தின் கதர் வாரியத்தின் துணைத்தலைவராக, மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளராக பல பதவிகளைச் சிறப்பித்துள்ளார் இவர். தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.

இலக்கியம், திரைப்படம், அரசியல் எனப் பலதுறைகளில் முத்திரை பதித்த கலைமாமணி கவிஞர் நா. காமராசன் மே 24, 2017 அன்று தமது உடல் நலக்குறைவால் 74 ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.

செய்திகள்