பாதிக்கப்பட்ட தரப்பை மையப்படுத்தாத முறையில் உள்ள இலங்கை மீதான தீர்மானம்

புதன் அக்டோபர் 07, 2015

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி ஐ.நாவில் ஆற்றிய இரண்டாவது உரையின் தமிழாக்கம் :

 

வணக்கம்


பாதிக்கப்பட்ட தரப்பை மையப்படுத்தாத முறையில் உள்ள இலங்கை மீதான தீர்மானம் தமிழர்களுக்கான நீதியை தடுக்கிறது. OISL அறிக்கையில் குற்றம் இழைத்த குற்றவாளிகளாக விளக்கமாக கூறப்பட்டுள்ள இலங்கை ராணுவத்தால் முழுவதும் காலனியாக்கப்பட்டுள்ள தங்கள் தாயகப் பகுதியில் தான் இன்றும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


ஐ.நாவின் இலங்கை மீதான அறிக்கையில்(OISL) குறைந்த அளவே கண்டறியப்பட்டுள்ள பல கொடூரமான குற்றங்களைச் செய்த இதே இலங்கை ராணுவம் தான் தமிழர்களின் தாயகத்தினை ஆக்கிரமித்திருக்கிறது. 


ராணுவத்தை தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்றவும், தமிழர்களுக்கு நீதி வழங்கவும் புதிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவும், இந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் மிகுந்த நாடுகளாக உள்ள இந்தியாவோ அமெரிக்காவோ முன் வரவில்லை. மாறாக புதிய இலங்கை அரசோடு ராணுவ ஒப்பந்தங்களை பலப்படுத்துகின்றன. இது தமிழர்களின் நீதியை முற்றிலும் மறுக்கிறது. இந்த இனப்படுகொலை போரில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சீனாவின் பங்களிப்பினை கருத்தில் கொண்டே தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியும்.


பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது பயங்கரவாதமாக நடந்து கொள்ளும் மிகக்கொடூரமான இலங்கை ராணுவம் இருக்கும் வரையில் நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடக்கும் என எவரும் எதிர்பார்க்க இயலாது. இலங்கை ராணுவம் ஹைதி நாட்டிற்கு ஐ.நாவின் அமைதிப்படையில் அனுப்பப்பட்ட பொழுது குழந்தைகள் மீது பாலியல் வன்முறை செய்து நிகழ்த்திய போர்க்குற்றங்களை இந்த அரங்கிற்கு நினைவு படுத்துவது எனது கடமை. மேலும் இந்த ராணுவம் கிட்டதட்ட 530 இந்திய தமிழக மீனவர்களை கொலை செய்தும் இருக்கிறது.


இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டே, 7.7 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாடு தனது சட்டமன்றத்தில் ‘இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை’, ‘தமிழர்களின் இறையாண்மை நிலை நிறுத்த தமிழர்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு’ எனும் தீர்மானத்தினை நிறைவேற்றியது. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் சர்வதேச விசாரணையை கோரி தமிழகத்தின் வீதிகளை போராட்டங்களால் நிரப்பி இருக்கிறார்கள். இலங்கை அரசை உள்ளடக்கி நடத்தப்படும் எந்த விதமான விசாரணை முறையையும், தமிழர்களின் மக்கள் இயக்கங்கள், சிவில் சமூகம், சில பெரும் அரசியல் கட்சிகள், ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் நிராகரிக்கின்றன.


ஈழத்தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபை , இலங்கையில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகும் ’தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆகப்பெரும்பான்மையான தமிழர்களின் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரிக்கையாக முன் வைத்திருக்கிறார்கள்.


இந்த கோரிக்கை என்பது 1948 முதலான இலங்கை அரசின் துரோக அரசியலாலேயே முன்னெழுகின்றது. இலங்கையின் இன்றய அதிபர் மைதிரிபாலா சிரிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையினால் நல்லிணக்க ஆணையத்தின் தலைவராக முன்மொழியப்பட்டுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா ஆகிய அனைவரும் தமிழர்களுக்கு எதிரான கொடும் குற்றங்களை செய்தவர்கள். இதில் சிலவற்றை ஐ.நாவின் இலங்கைக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விசாரிக்கப்பட வேண்டும்,
பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய இறையாண்மையை தங்களின் தாய்நிலத்தில் மீட்டெடுக்கப்பட வேண்டும். 


இனப்படுகொலை போன்ற கொடும் குற்றங்களுக்கு இரண்டுவிதமான நீதிகள் இருக்க முடியாது. சர்வதேச சுதந்திர விசாரணையில் இருந்து இலங்கையை தவிர்த்தல் என்பது தமிழர்கள் மீதான நிறுவனமயமாக்கப்பட்ட இனப்படுகொலையை வலுப்படுத்தவே செய்யும். சர்வதேசம் சிரியாவினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது போலவே இலங்கையையும் சர்வதேச விசாரணைமுறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.