பானையும் பத்திரம், கதிரையும் பத்திரம் - பிலாவடிமூலைப் பெருமான்

வியாழன் சனவரி 03, 2019

என்ரை கடவுளே, ஒரே கதிரையில் ஒரேயடியாய் குந்தியிருந்து முள்ளந்தண்டெல்லாம் விண்விண்ணென்று வலிக்குது.

 

எனக்கு விளங்குது, வந்தவுடன் வணக்கம் சொல்லாமல் ஏதேதோ புசத்திறன் என்று உங்களுக்குக் கொஞ்சம் மன்னை என்று. ஆனால் என்ன செய்யிறது பிள்ளையள், ஊர் விட்டு ஊர் வந்து இந்த வயசு போன காலத்தில் என்னைப் போல கிழடுகள் படுகிற பாடு சொல்லி மாள ஏலாது.

 

நாங்கள் எங்கடை பிள்ளையள், பேரப்பிள்ளையளோடை இந்த வயது போன காலத்தைக் கழிப்பம் என்று வெளிநாடு வந்தால், எங்களை எதோ பிள்ளைப் பிராக்காட்டுகின்ற ஆட்கள் மாதிரி எல்லே நடத்துகினம். அதுவும் சம்பளம், கிம்பளம் எதுவும் இல்லாத பிள்ளைப் பிராக்காட்டுகின்ற வேலை.

 

அந்த நாட்களில் எங்கடை பிள்ளைகளை வளர்க்கிறதுக்காக நாங்கள் எந்த அளவுக்கு மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து அதுகளைக் கரை சேர்த்திருப்பம் என்று அதுகளுக்கு எங்கை விளங்கப் போகுது.

 

போன கிழமை இப்படித்தான், ஸ்காபுறோவில் இருக்கின்ற என்ரை வீட்டுக்கு வந்த என்ரை மருமகன், ‘மாமா உங்கை சும்மா தானே இருக்கிறியள், ஒரு இரண்டு கிழமை என்னோடை வந்து நில்லுங்கோவன்’ என்று கேட்டவன்.

 

தாய்க்குப் பின் தாய்மாமன் என்று அந்த நாட்களில் சும்மாவே சொல்கிறவையள். என்ரை அம்மானோடை நான் எப்படி வாரப்பாடாக இருந்தனானோ, அப்பிடித் தான் என்ரை மருமகனும் என்னோடு நடக்கிறான் என்று நினைச்சு நானும் ஸ்காபுறோவில் இருந்து வெளிக்கிட்டு வன்கூவர் வந்தால், அவன் நத்தார் விடுமுறைக்கு வீட்டில் நிற்கிற தன்ரை பிள்ளையை பிராக்காட்டச் சொல்லிப் போட்டு ஒரே வேலை வேலை என்று திரியிறான். உது போதாதென்று அவனின்ரை மனுசியும் வீட்டில் நிற்கிறதில்லை. அதுக்குள்ளை ‘அந்தக் கதிரையில் இருக்காதேயுங்கோ, இது தான் உங்களுக்கான கதிரை’ என்று சொல்லி ஒரே கதிரையில் என்னைக் குந்தியிருந்து தன்ரை பிள்ளையோடை விளையாடச் சொல்கிறா.

 

எனக்கென்றால் கோபம் கோபமாகத் தான் வருகிறது. நான் என்ன அடிமையே, ஒரே கதிரையில் எந்த நேரமும் குந்தியிருக்கிறதுக்கு?

 

ஆனால் உந்தக் கதிரையைப் பற்றிக் கதைச்சதும் தான் எனக்கு எங்கடை இராஜவரோதயத்தாரின் மகனின்ரை திருக்கூத்து ஞாபகத்துக்கு வருகிறது.

 

அவர் தான் எங்கடை தமிழ்த் தேசியக் கூத்தமைப்பின் தலைவர் சம்பந்தன். அவனவனுக்குப் பிரதமர் ஆக வேண்டும், மந்திரி ஆக வேண்டும் என்று ஆசை என்றால் எங்கடை சம்பந்தருக்கு மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் குந்தியிருக்க வேண்டும் என்று ஆசை.

 

ஏதோ உந்தப் பதவியால் தமிழ் மக்களுக்கு நன்மையேதும் கிடைச்சாலும் பரவாயில்லை. தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனத்தையும் தராத ஒரு பதவியை வைச்சுக் கொண்டு, ஏதோ பெரிய சாதனை படைச்சவர் மாதிரித் தான் மூன்று வருசமாக சம்பந்தர் படம் காட்டிக் கொண்டு திரிகிறார்.

 

பெரும்பாலான நேரத்தில் பாராளுமன்றத்தில் நித்திரை கொள்கிறது தான் எங்கடை சம்பந்தருக்கு வேலை. அதுக்குள்ளை சொகுசான எதிர்க்கட்சித் தலைவர் கதிரையில் குந்தினால் ஆளின்ரை கதி என்ன என்று நினைச்சுப் பாருங்கோவன். உந்தக் கதிரைக்காகத் தான் தமிழீழத்தையே அந்த நாட்களில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தார் விலை பேசி விற்றவர்.

 

இப்ப அதே கதிரைக்காகத் தமிழரின்ரை தன்னாட்சி உரிமையை சம்பந்தர் கூவிக் கூவி விற்கிறார். எனக்கு வாற கோபத்துக்கு.... வேண்டாம்.

 

இதிலை பகிடி என்னவென்றால் பாருங்கோ, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறவையள் ஆளும் கட்சிக்காரர்களை எதிர்த்துக் குரல்கொடுத்தால் தான் அவையளை எதிர்க்கட்சிக்காரர் என்று அழைக்கின்ற நடைமுறை இஞ்சை மேற்குலக தேசங்களில் இருக்கிறது.

 

ஆனால் ரணில் மாத்தையாவின் ஆட்சியைக் கவிழ விடாமல் அவருக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இவ்வளவு காலமும் எதிர்க்கட்சித் தலைவர் கதிரையில் சம்பந்தர் குந்தியிருந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தவர்.

 

அதாவது பெயருக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் சம்பந்தர் இருந்தவரே தவிர, நடைமுறையில் அவர் ஒரு துணைப் பிரதம மந்திரி மாதிரித் தான் நடந்து கொண்டவர். தான் இல்லை என்றால் ரணில் இல்லை என்று வெளிநாட்டு இராசதந்திரி ஒருத்தரிட்டை சம்பந்தர் சொன்னவர் என்றால் நிலைமையை ஒருக்கால் நினைச்சுப் பாருங்கோ.

 

சரி, அந்த நேரத்தில் மகிந்த மாத்தையா மைத்திரியாரோடு கோவிச்சுக் கொண்டு மெதமுலானையில் அஞ்ஞாதவாசம் செய்தது எதிர்க்கட்சித் தலைவர் கதிரையில் சம்பந்தர் குந்தியிருக்கிறதுக்கு வழிசெய்திச்சுது.

 

ஆனால் இப்ப எல்லாம் தலைகீழாக மாறிப் போச்சு. பிரிந்தவர் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? என்ற கதையாக இப்ப மகிந்தரும், மைத்திரியும் இணைபிரியாத சகோதரர்களாகியிருக்கும் நிலையில் மகிந்தருக்குத் தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று சபாநாயகரே சொல்லிப் போட்டார்.

 

ஆனாலும் எங்கடை சம்பந்தர் மட்டும் விடாப் பிடியாகத் தான் தான் இப்பவும் எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராளுமன்றத்தில் முழங்குகிறார்.

 

எனக்கு இஞ்சை வன்கூவரில் மருமகன் வீட்டிற்கு வந்து ஒரே கதிரையில் குந்தியிருந்து முள்ளந்தண்டெல்லாம் விண்விண்ணென்று வலிக்குது. ஆனால் எங்கடை சம்பந்தர் மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் கதிரையில் இவ்வளவு காலமும் குந்தியிருந்தது காணாது என்று, இன்னும் ஒரு வருசத்துக்காகவது அதில் இருக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்.

 

அந்த நாட்களில் ஊரிலை படிக்கேக்குள்ளை மாதான முத்தான என்ற சிங்கள நாட்டுக் கதையில் வருகிற ‘பானை பத்திரம்’ என்கிற வாசகத்தைக் கேள்விப்பட்டிருப்பியள். இப்ப எனக்கு சம்பந்தரை நினைக்கேக்குள்ளை ‘கதிரை பத்திரம்’ என்று சொல்ல வேண்டும் போலத் தான் இருக்குது. எதுக்கும் ஆள் கனடா வரேக்குள்ளை பார்க்கிறன்.

 

வேறை என்ன பிள்ளையள்? இப்படியே நான் அலட்டிக் கொண்டிருந்தால் வேலை முடிச்சு வருகிற மருமகன் தன்ரை பிள்ளையை நான் ஒழுங்காகப் பார்க்கவில்லை என்று திட்டுவான். எதுக்கும் ஸ்காபுறோவுக்குத் திரும்பிப் போய் பிலாவடிமூலைக்குச் சென்றதும் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.

 

வரட்டே?

 

நன்றி: ஈழமுரசு (25.12.2018)