பாரதியார் பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு!

வியாழன் பெப்ரவரி 08, 2018

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பு வகித்த கணபதி, லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

லஞ்ச வழக்கில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.  எனவே, அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், பல்கலைக்கழக நிர்வாகத்தை தொடர்ந்து கவனிப்பதற்காக உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிபால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த குழுவில் சுனில் பாலிவாலுடன், சிண்டிகேட் உறுப்பினர்களான பேராசிரியர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்கும் வரை, பல்கலைக்கழகத்தை நிர்வாகக் குழு கவனிக்கும் என குழுவின் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.

“தமிழகத்தில் துணைவேந்தர் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை. லஞ்ச ஒழிப்பு  காவல் துறை கண்காணித்து நடவடிக்கை எடுத்திருப்பதால், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை. துணைவேந்தர் நியமனம் தொடர்பான விதிகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் துணைவேந்தரைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் சுனில் பாலிவால் தெரிவித்தார்.

இதற்கிடையே கணபதியுடன் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட வேதியியல் பேராசிரியர் தர்மராஜும் நீக்கம் செய்யப்பட்டார்.