பாரிஸ் நகரில் மல்லிகா ஷெராவத் மீது தாக்குதல்

வெள்ளி நவம்பர் 18, 2016

பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்டாஷியன்-ஐ தொடர்ந்து, பாரிஸ் நகரில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மீது வழிப்பறி கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, காயப்படுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாரிஸ் நகரில் கடந்த மாதம் அமெரிக்காவின் ரியாலிட்டி டிவி நட்சத்திரமான கிம் கர்டாஷியன் பாரிஸில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டார். அவரிடமிருந்து பல லட்சம் டாலர் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாவும், கிம்மிற்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும் பாரிஸ் நகர போலீசார் தெரிவித்திருந்தனர்.

பாரிஸ் ஃபேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு அறையில் கிம் தங்கியிருந்தபோது போலீஸ் சீருடையில் வந்த முகமூடியணிந்த நபர்கள் கிம்மின் அறைக்குள் நுழைந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாரிஸ் நகருக்கு சென்றிருந்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மீது வழிப்பறி கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, காயப்படுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 11-ம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் இங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த மல்லிகா ஷெராவத்தின் கைப்பையை திருட முயன்ற முகமூடி கொள்ளையர்கள் அவர் முகத்தில் குத்தி காயப்படுத்தியதுடன், கண்ணீர் புகை ‘ஸ்பிரே’ தெளித்ததாகவும் பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், அவரது கைப்பையை திருட இயலாமல் கொள்ளையர்கள் வெறுங்கையுடன் அறையில் இருந்து ஓட்டம்பிடித்ததாகவும் தெரியவந்துள்ளது.