பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: சிரியா இணைய தயார்!

Thursday November 09, 2017

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட தயாராக இருப்பதாக கூறியுள்ளதையடுத்து அமெரிக்கா மட்டும் தனிமைபடுத்தப்பட்டுள்ளது.

‘குளோபல் வார்மிங்’ என்றழைக்கப்படுகிற உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும்.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டன. நிகரகுவா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்தன. நிகரகுவா, கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கடந்த ஜூன் மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து சிரியாவும், அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தில் சேராமல் இருந்தனர்.

இந்நிலையில், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் முதலில் கையெழுத்தான போது, சிரியா சர்வதேச அளவில் விலக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து தற்போது அமெரிக்கா மட்டும் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.