பார்த்தீபன் கனவு!

Wednesday September 26, 2018

 நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ 
கருகிப்போனதோர்... உன்னத தியாகம்! 
பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு... 
அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம்!! 

ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும் வேலவன் கூட 
அவன் கண்மூடும்வரை... கண்திறக்கவில்லை ! 
நல்லூர்க் கந்தனும் கருணையற்றவனானான் !! 
இந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதி 
தியாக தீபமொன்றை அணைத்தது விதி 
சிந்திய கண்ணீரில் மூழ்கியதே நல்லூரான் வீதி 

அகிம்சையே அறமென்ற இந்திய தேசம் 
ஈழத்தில் செய்த முதல் நாசம் ! 
பார்த்தீபனின் பட்டினிப்போரால்... 
வெளுத்துப்போனது... பாரதத்தின் அகிம்சை வேஷம்! 

'பஞ்ச வேண்டுதலோடு' பட்டினி கிடந்து போராடி... 
பார்த்தீபன் மடிந்த போதுதான்... மகாத்மாவுக்கும் புரிந்திருக்கும், 
கோட்சேயின் துப்பாக்கிக் குண்டில்... தான் சாகவில்லையென்று ! 
வீணர்கள் பார்த்து ரசிக்க ...வீணாகிப் போனதவன் தியாகம் !! 

தியாக சீலன் திலீபன் 
ஈழத்தாய் எல்லோருக்கும் பிள்ளையானவன் ; 
இளையவர் அனைவருக்கும் அண்ணனானவன் ; 
மகா யாகத்தின் புனிதம் வென்றவன் ; 
தியாகத்தின் சிகரம் தொட்டவன் ; 
ஈழமண்ணுக்கு இலட்சியத் திலகமிட்டவன்! 

அவன் வயிற்றில் பற்றிய தீதான், 
இன்னும் எரிகிறது எங்கள் நெஞ்சிலே...! 
அவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான், 
இன்றும் தணியாத தாகமாய் எம்மிலே...!! 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்...! 
சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!! 
இது அன்று அவன் உதிர்த்த நிதர்சன வார்த்தைகள்...!!! 

திலீபனின் தியாகம் ஜெயிக்கட்டும்...! 
பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்... !! 
இதுதான்.... நம் மனதில் என்றும், 
அழியாமல் விதைக்க வேண்டிய இலட்சிய வார்த்தைகள்...!!! 

தியாகச் செம்மல் திலீபனின் 
பசியையும் தாகத்தையும் எமதாக்குவோம்! 
பேருலகே எதிர்த்தாலும் .... 
பார்த்திபன் கனவு ஒருநாள் பலிக்கும்! - அவனது 
உன்னத தியாகம் நிச்சயம் ஜெயிக்கும்!! 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்...! 
சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!!