பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம்!

Tuesday October 23, 2018

பிரபல பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நேற்று (22) கேரளாவில் நடைபெற்றது.

கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாகப் பிறந்த இவர், கர்நாடக இசை பயின்றவர். மேலும், ஒற்றை நரம்பை மட்டுமே கொண்டு வாசிக்கப்படும் காயத்ரி வீணையை வாசிப்பதிலும் வல்லவர். மிகவும் அரிதான இந்த இசைக்கருவியை, அவ்வளவு எளிதாக யாரும் வாசித்துவிட முடியாது.
 
‘செல்லுலாய்டு’ என்ற மலையாளப் படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய ‘காட்டே காட்டே’ பாடல், அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் பாடலுக்காக கேரள அரசின் விருதையும் (சிறப்புக் கவனம்) பெற்றார். அதன்பிறகு மலையாளம் மற்றும் தமிழில் ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘குக்கூ’ படத்தில் இடம்பெற்ற ‘கோடையில மழ போல’ பாடல்தான் தமிழில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய முதல் பாடல். அதன்பின் ‘என்னமோ ஏதோ’, ‘வெள்ளக்கார துரை’, ‘தெறி’, ‘வீர சிவாஜி’ உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.

இந்நிலையில், வைக்கம் விஜயலட்சுமிக்கும், மிமிக்ரி கலைஞரான கேரளாவைச் சேர்ந்த அனூப் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. விஜயலட்சுமியின் குடும்ப நண்பரான அனூப், இன்டீரியர் டிசைனர். கடந்த செப்டம்பர் 10-ம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நேற்று (அக்டோபர் 22) திருமணம் நடைபெற்றது.

விஜயலட்சுமியின் பிறந்த இடமான வைக்கமில் உள்ள மஹாதேவா கோயிலில், கேரள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.