பிரதமர் மோடிக்கு கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதி!

வியாழன் ஏப்ரல் 12, 2018

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி சென்னை வருகையின்போது தி.மு.க.வினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். இதையடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று தி.மு.க.வினரின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இன்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருணாநிதி இன்று கருப்பு சட்டை அணிந்திருந்தார். வெள்ளை வேட்டியும், கருப்பு சட்டையின் மேல் மஞ்சள் நிற துண்டும் அணிந்திருந்தார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டிலும் இன்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது. தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.

ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தி.மு.க. தொண்டர்கள் ஆகியோரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள்.