பிரபல முதல்வரின் வாழ்க்கைப் படத்தில் மம்முட்டி!

சனி மார்ச் 24, 2018

மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகரான மம்முட்டி அடுத்ததாக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஆந்திர மாநில முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். கர்னூரில் உள்ள ருத்ரகொண்டமலை உச்சியில் ஹெலிகாப்டர் மோதி ராஜசேகர ரெட்டி உள்பட 5 பேர் இறந்தனர்.

நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு ராஜசேகர ரெட்டி உடல் மீட்கப்பட்டது. ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி நடத்திய யாத்திரை பயணம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர் சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

மறைந்த ராஜசேகர ரெட்டி வாழ்க்கை சினிமா படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணி நடந்தன. அவரது வேடத்தில் பெரிய நடிகர் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டது.

இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள பட உலக சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கிறார். இதுகுறித்து இயக்குனர் மகிராகவ் கூறியதாவது:-

ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்க மம்முட்டி ஒப்புக் கொண்டுள்ளார். அவரை விரைவில் சந்திக்க உள்ளேன். நாங்கள் ஒன்றாக இணைந்து ராஜசேகர ரெட்டி வேடம் குறித்து விவாதிப்போம் என்றார்.

ராஜசேகர ரெட்டி மனைவி வேடத்தில் நயன்தாராவும், மகன் ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் சூர்யாவும் நடிப்பதாக வந்த தகவலை இயக்குனர் மகிராகவ் மறுத்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா நடிக்க இருப்பதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது. நாங்கள் இன்னும் யாரையும் அணுகவில்லை.

தற்போதுவரை முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் என்றார்.