பிரான்சில் ஏவ்றி பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி

Monday June 19, 2017

ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கம், ஏவ்றி தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று முன்தினம் (17.06.2017) சனிக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான ஏவ்றி பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஏவ்றி தமிழ்ச்சோலை நிர்வாகி திரு.மனோகரன் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை பிரான்சு தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளரும் ஏவ்றி தமிழ்ச் சங்கத் தலைவருமான திரு.பாலகுமாரனும் தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு.கிருபாவும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து ஈகைச்சுடரினை 25.09.1992 அன்று வீரச்சாவடைந்த மாவீரர் லெப்.கேணல் சுபன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து இல்லப் பொறுப்பாசிரியர்கள் தமது இல்லங்களின் முன்பாக மங்கள விளக்கேற்றிவைத்தனர். 

நடுவர்களின் சத்தியப் பிரமாணத்தைத் தொடர்ந்து தமிழர் விளையாட்டுத்துறையின் போட்டி முகாமையாளர் திரு. இராஜலிங்கம் அவர்கள் போட்டிகளை ஆரம்பித்துவைத்தார். 

திலீபன் இல்லம் , அன்னை பூபதி இ;ல்லம் ஆகிய இல்லங்களிடையே போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றன.  நிறைவாக வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பதக்கங்களும் அணிவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். செயற்பாட்டாளர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிறைவில் திலீபன் இல்லம் அதிக புள்ளிகளைப்பெற்று முதலிடத்தைப் பிடித்தது. 

இந்நிகழ்வில் ஏவ்றி மாநகரசபை உறுப்பினர்கள், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் உபகட்டமைப்பு பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.