பிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா!

Tuesday July 31, 2018

தமிழியல் இளங்கலைமாணி (B.A ) முதலாவது பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை,  பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

எமது மண் சார்ந்த கருத்தியலோடும் வாழ்வியல் சார்ந்த கருப்பொருளோடும் மேற்படி பட்டமளிப்பு விழாவில், தமிழார்வலர்களும், தமிழ்ச்சோலையில் கற்பிக்கும் ஆசிரியர்களும் புலம்பெயர் மண்ணில் பிறந்து வளர்ந்து , தமிழ்ச்சோலைப் பள்ளிகளில்  ஆண்டு 12 வரை தமிழ் மொழியைக் கற்ற இளையோரும் பட்டம் பெறுவது சிறப்பிடம் பெறுகிறது

கடந்த ஆறு ஆண்டுகளாக, பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின்   வழிநடத்தலில் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தினூடாக நடைபெற்றுவரும் பட்டப்படிப்பிற்கான பட்டச்சான்றிதழ்களை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கி வருகின்றது.

மூன்று ஆண்டுகள் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களின் ஆக்கத்தில் உருவான சிறுகதைத் தொகுப்புப் பனுவல் ஒன்றும் அன்றைய நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது. மாலை நிகழ்வாகத் தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு நான்காவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பத்து பட்டகர்கள் பல்வேறு தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கவுள்ளனர்.அத்தோடு பட்டகர்களால் உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்படும் தமிழர் பண்பாட்டுக் கலைகளில் ஒன்றாகிய நாட்டுக்கூத்தும் இடம்பெறுகிறது.

இப்பட்டப்படிப்பானது பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழகங்கள்  (Commonwealth Unversities ) மற்றும் பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களால்  (International  Universities) அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.