பிரான்சு கிளிச்சிப் பகுதியில் இடம்பெற்ற மூதூர் படுகொலை 9 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

வியாழன் ஓகஸ்ட் 06, 2015

திருகோணமலை மூதூரில் 2006 ஆகஸ்ட் 04 அன்று சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 9 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு  கடந்த 04.08.2015 செவ்வாய்க்கிழமை பிரான்சு கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபியின் முன்பாக இடம்பெற்றது.  

 


 கிளிச்சி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.சச்சி அவர்களின் தலைமையில் முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிச்சி தமிழ்ச்சங்க செயற்பாட்டாளர் திரு.பரா அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை மாவீரர் கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்.


நினைவுரைகளை, கிளிச்சி மாநகர சபை  உறுப்பினர் திருமதி மிராய், கிளிச்சி மாநகரசபை முன்னாள் உறுப்பினர் திரு. சீதாராமன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முக்கிய உறுப்பினர் திரு. பாலசுந்தரம், பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாட்டாளர் ஆகியோர் நிகழ்த்தினர்.  அத்துடன் ஆர்ஜெந்தை தமிழ்ச் சங்க மாணவி குறித்த பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நிகழ்வில் வாசித்தார்.


கிளிச்சி மாநகர சபை உறுப்பினர் தனது உரையில், மூதூர் படுகொலையின் 9 ஆவது வருடத்தில் நாம் நிற்கின்றோம். வரும் வருடத்தில் இதனை அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் பொதுக் கவனயீர்ப்பு நிகழ்வாக செய்யவேண்டும். 


அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள,; பிரெஞ்சுக்காரர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருந்தால் எப்போதோ இதற்கு நீதி கிடைத்திருக்கும். இவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தால்தான் இதுவரை நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பிரெஞ்சுத் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் என்பது உண்மை.


வெளி உலகிற்கு இலங்கையில் பிரச்சினை உள்ளது என்பதும் தெரியும், அது அழகான ஒரு சுற்றுலா நாடு என்பதும் தெரியும் ஆனால், அங்கு பிரச்சினை என்று கூறிக்கொண்டு இந்தவேளையில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் சுற்றுலாசென்றுள்ளனர். இதுவே வெளி உலகை சிந்திக்கவைக்கின்றது - என்றார்.


தமிழீழ மக்கள்பேரவைப் பொறுப்பாளர் திருச்சோதி அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் பிரெஞ்சு மொழியில் உரை நிகழ்த்தினார்.


பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முக்கிய உறுப்பினர் திரு.பாலசுந்தரம் அவர்கள் தனது உரையில், சர்வதேசத்திடம் நாம் போராடாமல் எமக்கு நீதி கிடைக்காது. சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் எமக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. சர்வதேசத்தின் மூலம் எமக்கு நீதிகிடைக்க, போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். ஐ.நா. விசாரணை அறிக்கை உள்ளக விசாரணையை வலியுறுத்தியே வரும் என்பது தெளிவாகியுள்ளது.

வரும் செப்ரெம்பர் 21 திங்கட்கிழமை ஐ.நா. முன்றிலில் இடம்பெறவுள்ள மாபெரும் ஒன்றுகூடலில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்.
இதற்கான விசேட தொடருந்து போக்குவரத்து ஒழுங்குகள் வழமைபோன்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைத்து உரிமைக்குரல் எழுப்பவேண்டும் - என்றார். 


தமிழரின் தாகத் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.  

 


ஊடகப்பிரிவு - பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.