பிரான்சு பொண்டியில் சிறப்பாக இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

புதன் நவம்பர் 11, 2015

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கேணல் பரிதி அவர்களின்  3 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணியளவில் பிரான்சு பொண்டிப் பகுதியில் மண்டப நிகழ்வாக இடம்பெற்றது.


முன்னதாக பருதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான பாரிஸ் ஜோர்தான் பகுதியில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்ற வணக்க நிகழ்வைத் தொடர்ந்து 10 மணியளவில் கல்லறை வணக்க நிகழ்வு இடம்பெற்றிருந்தது. 


தொடர்ந்து, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப் பெண்கள் அமைப்பும் பொண்டி பிராங்கோ தமிழ்ச்சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கேணல் பரிதி அவர்களின் திரு உருவப் படத்துடன் தமிழீழ மண்ணை நேசித்த அன்னை மாரியம்மாளின் திரு உருவப்படமும் வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.


 இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைக்க திரு உருவப்படங்களுக்கான மலர்மாலையை  கேணல் பரிதி அவர்களின் குடும்பத்தினர் அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர்வணக்கத்துடன்  மலர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து நிகழ்விற்கு சிறப்பாக அழைக்கப்பட்டிருந்த நகர மேஜர் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள் விளக்கேற்றிவைத்ததுடன் பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பினரால் பொன்னாடைபோர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர்.


வரவேற்புரையைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழ்ச்சோலை மற்றும் நடனப்பள்ளி மாணவ மாணவிகளின் எழுச்சி நடனங்கள், நாடகங்கள், உரையாடல்கள், கவியரங்கம், கவிதைகள், சிறப்புரைகள்  போன்றவை கேணல் பரிதி அவர்கள் நினைவாக அமைந்திருந்தன.  அத்துடன், கேணல் பரிதி அவர்களின் நினைவுசுமந்த காணொளி திரையில் காண்பிக்கப்பட்டது. 


நிகழ்வில் கேணல் பரிதி அவர்களின் விருப்பத்திற்கமைவாக பிரான்சு தேசத்தில் பட்டம்பெற்ற தமிழ் மாணவர்கள் 14 பேர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மதிப்பளிக்கப்பட்டனர். குறித்த மதிப்பளித்தலை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்  வழங்கியிருந்தனர்.  நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க அனைவரும் எழுந்து கைகளைத் தட்டி நின்றனர். இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானொர் கலந்துகொண்டு தமது வணக்கத்தைத் தெரிவித்திருந்தனர். 


பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு.