பிரான்ஸில் தமிழ் பெண்ணொருவர் சாதனை!

Tuesday July 10, 2018

பிரான்ஸில் ஈழத்   தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக ஈழத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக தெரிவாகி உள்ளார்.

 2018 ஆம் ஆண்டுக்கான மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த மாதம் 23ம் திகதி நடைபெற்றது. நான்சி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் 300 பேருக்கு வைத்தியர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் ஈழத்தைச் சேர்ந்த சிநேகிதா ஸாகரியும் ஒருவராக பட்டம் பெற்றார்.

 இவர் பிரான்ஸ் மெட்ஸ் நகரில் வசிக்கும் ஈழத் தமிழர்களான சுந்தரவடிவேல்பிள்ளை சந்திரவதனி புதல்வி ஆவார். ஈழத்தில்  ஆரம்ப கல்வியை ஆங்கில மொழியில் தொடர்ந்த சிநேகிதா, பிரான்ஸிற்கு குடிபெயர்ந்த நிலையில் பிரெஞ்சு மொழியில் தனது படிப்பினை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

 2008ம் ஆண்டு மெட்ஸ் நகரிலிருந்த கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 28 சிறந்த மாணவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப் பட்டு GASTON-HOFFMANN விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 தானொரு வைத்தியராக வர வேண்டும் என்ற கனவோடு தீவிரமாக படித்தமையினால் இன்று அது நனவாகி உள்ளதாக சிநேகிதா குறிப்பிட்டுள்ளார்.  பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் ஒரு ஈழத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக வந்திருப்பது இதுவே முதற் தடவையாகும்.