பிரிட்டன் இளவரசர் திருமணத்துக்கு வருபவர்கள் உடன் சாப்பாடு கொண்டுவருமாறு அறிவுறுத்தல்!

திங்கள் மே 07, 2018

பிரிட்டன் அரச குடும்ப திருமணத்திற்கு அழைக்கப்பட்டதில் முக்கிய வி.ஐ.பி.க்கள் தவிர மற்றவர்கள் கையோடு சாப்பாடு, குடிநீர் போன்றவற்றை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டன் இளவரசர் ஹாரி - ஹாலிவுட் நடிகை மேகன் மார்க்லே திருமணம் வரும் 19-ம் திகதி வின்ஸ்டர் காஸ்டில் என்ற இடத்தில் நடக்க உள்ளது. அரச குடும்ப திருமணத்திற்கு குறிப்பிட்ட பலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய வி.ஐ.பிகள் தவிர்த்து பொதுமக்களில் சிலருக்கும் அழைப்பிதழ்கள் செல்லும். இதில் பிரிவு 1, பிரிவு 2 என இரு வகை உண்டு. இந்த பொதுமக்களில் இளவரசர் ஹாரியுடன் படித்தவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என 600 பேர் முதல் பிரிவில் வருகின்றனர். இவர்களுக்கு சிற்றுண்டி மட்டும் வழங்கப்படும்.

இரண்டாவது பிரிவில் 1200 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் எதுவும் வழங்கப்படாது. "திருமணத்திற்கு வரும் போது உணவு, குடிநீர் கொண்டு வரவேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணத்திற்கு அழைக்கப்பட்டாலும் இவர்கள் மணமக்களை அருகிலிருந்து கூட பார்க்க முடியாது.

அங்குள்ள புல்தரையில் இவர்கள் அமரவைக்கப்படுவார்கள். பால்கனியில் நின்று கொண்டு திருமண ஜோடி முத்தமிடுவதை இவர்கள் பார்க்கலாம். சாப்பாடு போடாவிட்டாலும் மக்கள் கொண்டு வரும் பரிசுப்பொருட்களை அரச குடும்பத்தினர் வரவேற்கின்றனர்.