பிரித்தானிய ஆயுதப்படைகளில் இணைய வெளிநாட்டவர்களும் சந்தர்ப்பம்

Tuesday November 06, 2018

பிரித்தானிய ஆயுதப்படைகளில் இணைய வெளிநாட்டவர்களும் அனுமதிக்கப்படுவார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரித்தானியாவில் வாழாதவர்களுக்கும் இந்த வாய்ப்புக்கிடைக்கின்றது.

பொதுநலவாய நாடுகளைச்சேர்ந்த மக்கள் பிரித்தானிய ராணுவத்தில் இணைவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பிரித்தானியாவில் வசித்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இன்று பாதுகாப்பு அமைச்சால் நீக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படைக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து 1,350 கூடுதல் பணியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கு இப்புதிய சட்டம் வழிவகுக்குமென ராணுவத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ராணுவத்தில் நிலவிவரும் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்குத் தேவையான பணியாளர்களை நியமிக்க ராணுவத்தினர் தவறியதைத் தொடர்ந்தே இம்மாற்றங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றன.

பிரித்தானியாவின் முழுநேர இராணுவத்தில் 5.7 சதவிகிதம் பற்றாக்குறை நிலவுவதாக ஏப்ரல் மாதம் தேசிய தணிக்கைக்கு குழுவால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பொதுநலவாய நாடுகளான இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, இலங்கை மற்றும் பிஜி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ராணுவத்தின் எல்லாவிதமான பணிகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படுவார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.