பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல்!

Wednesday May 16, 2018

பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவரும், தொழிற்கட்சியின் தலைவருமான  ஜெரமி கோர்பின்  முன்னிலை வகிக்க இன்று மாலை 6:30 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது.

1983ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய கறுப்பு ஜுலை தமிழின அழிப்பு நாட்கள் தொடக்கம் பிரித்தானிய நாடாளுமன்றில் தமிழர்களின் தன்னாட்சியுரிமைக்காகக் குரல்கொடுத்து வரும் ஜெரமி கோர்பின், கடந்த 2015ஆம் ஆண்டு தொழிற்கட்சியின் தலைவராகவும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவியேற்றார்.

அதன் பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு சித்திரை மாதம் 11ஆம் நாளன்று பிரித்தானிய நாடாளுமன்றில் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்திய ஜெரமி கோர்பின், தமிழ் மக்களுக்கான எந்த அரசியல் தீர்வும் தன்னாட்சியுரிமையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதே தொழிற்கட்சியின் நிலைப்பாடு என்று அடித்துக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நாட்களில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  கட்டிடத் தொகுதி ஒன்றில் இன்று மாலை 6:30 மணிக்கு நடைபெறும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் ஜெரமி கோர்பின் உரையாற்றுகின்றார்.